மக்களின் நம்பிக்கை வீண் போகாத வகையில் திமுக ஆட்சி! கட்சி தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!
சென்னை: மக்களின் நம்பிக்கை வீண் போகாத வகையில் திமுக ஆட்சி நடந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இரண்டாண்டு சாதனைகளை மக்களின் இதயங்களில் பதித்திடுவோம் என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதைக் கூறியிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் வருமாறு;
ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, அவர்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே 7-ஆம் நாள் முதல் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலனை மனதில் கொண்டு நிறைவேற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

மக்களுக்கான திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. அந்தத் திட்டங்களின் பலன்களை மக்கள் உணரும்படி எடுத்துரைக்க வேண்டியது கழக உடன்பிறப்புகளின் கடமை.
நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், உண்மையை உரக்கச் சொல்லவும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் வதந்திகளையும் அவதூறுகளையும் முறியடிக்கவும் நாமும் காணொளி வாயிலாகப் பதில் தர வேண்டியுள்ளது.
கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அதன் மீது அவதூறுகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள். கழகத்தைத் திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். கழகத்தை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள்.
இன்று, நேற்றா இதைப் பார்க்கிறோம்? என்றுதான் இந்த வீண்பழிகளைக் கண்டு நாம் அஞ்சியிருக்கிறோம்? திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. மே 7-ஆம் நாள் சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன்.
அதே நாளில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதுபோலவே மே 8, 9 ஆகிய நாட்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தொடர்கின்றன. இந்தச் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில், யார் யார் எங்கு உரையாற்றுகிறார்கள் என்ற விவரங்கள் முரசொலியில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு கூட்டம் நடத்தினோம் என்றில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம் - நகரம் - பகுதி - பேரூர் என அனைத்து இடங்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
மாண்புமிகு அமைச்சர்கள், கழகத்தின் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மட்டுமின்றி கழகத்தின் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களும், கழகத்தின் கொள்கைகளை எடுத்துரைக்கும் ஆற்றல்மிக்க உடன்பிறப்புகளும் இந்தப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். எண்ணற்ற சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சொற்பொழிவாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

75 ஆண்டுகளை நெருங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் அலையலையாய் மக்கள் திரண்ட பிரம்மாண்டமான மாநாடுகளும் உண்டு. தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் என ஒவ்வொரு மனிதரையும் தேடிப் போய் மேற்கொண்ட பரப்புரைகளும் உண்டு. அந்த வகையில், மக்களைத் தேடி நாம் பயணிக்கிறோம். அவர்களுக்காக நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துரைக்க இருக்கிறோம்.
இளைஞரணிச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் இளைஞரணியினர் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன், இளைஞரணி சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். இதுபோலவே ஒவ்வொரு அணியினரும் கழகத்தின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களில் ஒருவனான எனக்கு நிறையவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications