பள்ளித் தோழிகள் தடுத்து நிறுத்திய குழந்தைத் திருமணம்... பெற்றோருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தைத் திருமணம், பள்ளித் தோழிகள் அளித்த தகவலின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூரை அடுத்துள்ள திருப்பத்தூரில், நேபாளத்தைச் சேர்ந்த கூர்கா ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகள் ரேகா (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருப்பத்தூரை அடுத்துள்ள பள்ளங்கோவில் அரசுப் பள்ளியில் கடந்தாண்டு 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டு ரேகாவை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பாத அவரது பெற்றோர், பள்ளியில் இருந்து ரேகாவின் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்றுள்ளனர்.

15 வயதே ஆன ரேகாவிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், பண்ருட்டி பகுதியில் சிறுமியின் திருமணம் நேற்று நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது. திருமணம் குறித்து முன்னதாகவே அறிந்திருந்த ரேகாவின் பள்ளி தோழிகள், இது குறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கிராமமக்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, மாவட்ட நன்னடத்தை அலுவலர் கணேசன்,உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் திருப்பத்தூரில் இருந்த ரேகாவின் பெற்றோரை சந்தித்து, கட்டாயம் திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், ரேகாவின் பெற்றோரிடம், குழந்தைத் திருமணம் செய்யக் கூடாது என்று கையெழுத்து வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக நேற்று நடைபெற இருந்த குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications