அக்டோபர் 12ம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாடிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
சென்னை: தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி கிடைத்த நாளான 12.10.2013 ஆம் நாளைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம், செம்மொழி நாளாகக் கொண்டாடினர்.

தமிழ்மொழிக்கு 12.10.2004 அன்று இந்திய அரசு செம்மொழி எனும் தகுதியை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக செம்மொழித் தகுதி பெற்ற 9ம் ஆண்டு விழாவைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் 14.10.2013 அன்று மாலை செம்மொழிநாளாக கடைபிடித்துக் கொண்டாடினர். இவ்விழாவிற்குப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் அ.ஆரோக்கியதாசு அவர்கள் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
உலகளவில் மிகத் தொன்மையான மொழிகளுக்குச் செம்மொழி எனும் தகுதி வழங்கப்படுகிறது. அம்மொழியின் தொன்மையையும், தனித்தன்மையையும் ஆய்வுலகிற்கு வெளிக்கொணரும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள தேவையான நிதியையும், வசதி வாய்ப்புகளையும் அந்தந்த நாட்டு அரசுகள் செய்து வருகின்றன. உலகில் கிரேக்கம், இலத்தீன், சீனம், எபிரேயம், அரபி, பார்சியன் போன்ற மொழிகளுக்குச் செம்மொழி என்னும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்மொழிகளுக்கான நிறுவனங்களும் சிறப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு தம்மொழியினை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பெரும்பங்காற்றி வருகின்றன.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்த வரலாறு இந்தியாவில் பணியாற்றி வந்த ஆங்கிலேய அதிகாரியான பிரான்சிஸ் வொய்ட் எல்லீஸ் அவர்கள் (1777-1819) தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்து தமிழ்மொழியின் தனிச்சிறப்பினையும் அதன் தொன்மையினையும் முதன் முதலில் உலகிற்கு எடுத்துக் காட்டினார். அதற்கு அடுத்து 1856 ஆம் ஆண்டு கால்டுவெல் என்னும் மொழியியல் அறிஞர், தமிழ்மொழியினை ஆய்ந்தறிந்து அதன் செம்மொழித் தன்மையை A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற தன்னுடைய நூலில் உலகிற்கு எடுத்துரைத்தார்.
தமிழறிஞர்களில் முதன் முதலாக பரிதிமாற் கலைஞர் அவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1902 ஆம் ஆண்டு வெளியிட்ட செந்தமிழ் எனும் இதழின் மூலம் தமிழ்மொழி, உயர் தனிச்செம்மொழி என முழக்கமிட்டார். மேலும், 1903 ஆம் ஆண்டு தமிழ்மொழியின் வரலாறு எனும் நூலில் உலகின் தொன்மையான மொழிகளையெல்லாம் எடுத்துக்காட்டி, அவற்றுள் தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளை வெளிக்கொணர்ந்து செம்மொழி என்னும் தகுதிக்கு வலுசேர்த்தார்.
1918 ஆம் ஆண்டு சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜம் பலநூறு தமிழறிஞர்களை ஒன்றுக்கூட்டி, தமிழ்மொழி செம்மொழியே என்று தீர்மானம் நிறைவேற்றியதன் தொடர்ச்சியாக 1918 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபையினரும் தமிழ்மொழிச் செம்மொழியே என தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், 1919 ஆம் ஆண்டு அச்சபையின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் பல்துறை அறிஞர்களின் முன்னிலையில் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியாகக் (Classical Language) கருதப்பட வேண்டுமெனவும் ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பாடமாக வேண்டுமெனவும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
1919 ஆம் ஆண்டு தஞ்சையில் உள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன் ஏழு மற்றும் எட்டாம் வருடத்திற்கான ஆண்டு விழாவில் உலகம் போற்றும் பல்வேறு தமிழறிஞர்களின் முன்னிலையில் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானத்தின் வாயிலாக 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு விழாவிலும் 1922 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பதினோராவது ஆண்டு விழாவிலும் 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற பனிரெண்டாவது ஆண்டுவிழாவிலும் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிக்க இந்திய அரசை வற்புறுத்தியது. மேலும், 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளிவிழாவிலும் 1951 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமியை உருவாக்கிட நடத்திய மாநாட்டிலும் தமிழ்மொழியைச் செம்மொழியாக்க வேண்டுமென தமிழறிஞர்கள் பலரும் இந்திய அரசை வலியுறுத்தினர்.
1955 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழறிஞர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற அகில இந்தியக் கீழ்த்திசை மாநாட்டிலும் மேற்குறித்த தீர்மானம் வழிமொழியப்பட்டன. மேலும், 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 1995 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போதும் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இவ்வாறாக பல்வேறு நிலைகளில் வலியுறுத்திய கோரிக்கைகளுக்குப் பயனாக 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் மத்திய அரசு ‘செம்மொழிகள்' என்ற ஒரு சிறப்புப் பிரிவைத் தோற்றுவித்துத் தமிழைச் ‘செம்மொழி' என அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக தமிழாய்வு பணிகளுக்காக மைசூரில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் ஒரு மையமாகவும் பின்பு 2008 ஆம் ஆண்டுமுதல் சென்னையில் தன்னாட்சி பெற்ற தனி நிறுவனமாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. இந்திய மொழிகளில் முதன் முதல் செம்மொழித் தகுதியைப் பெற்ற மொழி தமிழ்மொழியே!. இதன்பிறகே சமஸ்கிருதம் இன்னபிற மொழிகளெல்லாம் செம்மொழித் தகுதியைப் பெற்றன. இனிவரும் காலங்களில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்த நாளான அக்டோபர் 12 ஆம் நாளைச் செம்மொழிநாளாக மத்திய அரசு அறிவித்து சிறப்பிக்க வேண்டும்.

வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் இந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்தி நிலையான சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு வழிவகை காண வேண்டும். தமிழறிஞரை நிலையான இயக்குநராக நியமிக்க வேண்டும். பல்லாண்டுகளாக தீர்க்கப்படாமலிருக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுச் செம்மொழிப் பணியாளர்களின் சமூகநீதியும் தமிழ்க்குடிகளின் உரிமைகளும் காப்பாற்றப்பட வேண்டும். செம்மொழித் தமிழ்ப் பணியாளர்களின்மீது பல்வேறு வன்முறைகளைத் தொடுத்துப் பொது அமைதிக்கும் இறையாண்மைக்கும் எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனக் கோரிக்கைகளுடன் இனிவரும் காலங்களில் தமிழ்மொழியப் பாதுகாக்கவும், நிறுவனத்தைப் பாதுகாக்கவும், பணியாளர்களைப் பாதுகாக்கவும் பணியாளர்கள் சங்கமாகிய நாம் சூளுரை ஏற்றுத் தொடர்ந்து பயணிப்போம் என்றார்.
இவ்விழாவில் பணியாளர் சங்கம் சார்பில் பின்வரும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
‘உலகின் மூத்த மொழியாம் தமிழ்மொழியை உயிரெனக் காப்போம்
உலகமொழிகளின் தய்மொழித் தமிழென பாரிற்கு உரைப்போம்
செம்மொழித் தமிழாய்வைத் திறம்பட செய்து எண்திசைச் சேர்ப்போம்
இப்பணியை மேற்கொள்ளும் இந்நிறுவனத்தையும் பணியாளர்களையும் பாதுகாப்போம்'
இவ்விழாவிற்குப் பணியாளர்கள் சங்க செயலாளர் முனைவர் ப.கண்ணதாசன் அவர்கள் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications