விஜய் அரசியல் பேச்சுக்கு, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் என்ன சொன்னாங்க தெரியுமா?
Recommended Video

சென்னை: நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் குறித்து, மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடன் இன்று, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு திருப்பரங்குன்றத்தில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று, பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ஓபிஎஸ் கருத்து
நிருபர்களுக்கு பேட்டியளித்த பன்னீர் செல்வத்திடம், விஜய் அரசியல் பேச்சு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களுக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. யார் வேண்டுமானாலும் என்ன கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றார்.

கட்சியே ஆரம்பிக்கலை
இதுகுறித்து முதல்வரிடம் கேட்டபோது, "தமிழகத்தில் 8 கோடி மக்கள் உள்ளனர். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் கட்சி ஆரம்பிக்கலாம்" என்றார். விஜய் உங்களுக்கு போட்டியா என்று நிருபர் ஒருவர் கேட்க, "கட்சியே ஆரம்பிக்கவில்லை அப்புறம் எங்களுக்கு போட்டியா என்று நாங்கள் எப்படி சொல்ல முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். அதன் அடிப்படையில் அவர் சொல்லியிருப்பார்" என்றார் முதல்வர்.

சண்டை மூட்டுறீங்களே
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "சண்டை மூட்டிவிடுற மாதிரியே கேள்வி கேட்குறீங்க" என நிருபரை பார்த்து சிரித்தபடி சொன்னார். ஏற்கனவே அமைச்சர் உதயகுமார் விஜய் பேச்சுக்கு கடும் விமர்சனத்தை முன் வைத்தார். அமைச்சர் பாண்டியராஜனோ, விஜய்யால் அதிமுகவிற்கு பிரச்சினை இல்லை என்றார்.

விஜய் விமர்சனம்
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், குட்டி கதை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மூலம், தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்தார். முதல்வராக வேண்டும் என்ற ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
