ஜாதி நிழல்கள்... மேலிடத்துக் கண்காணிப்பு வளையத்தில் ஓ.பி.எஸ்?
சென்னை: முதல்வரான பின்னரும் பவ்யமாய், எளிமையாய் வலம் வந்தாலும், பன்னீர் செல்வத்தின் பின்னணியில் ஜாதி நிழல் தொடருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், முதல்வரை ரகசியமாக கண்காணிக்க அதிகார மட்டம் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றதை அவரது முதல்வர் பதவி, எம்.எல்.ஏ பதவி ஆகியவை பறிபோயின. இதனைத் தொடர்ந்து நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் புதிய முதல்வராக, தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டாலும், இன்று வரையில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்குக் கூட செல்லாமல், தான் ஏற்கனவே இருந்த, அமைச்சருக்கான அறையிலேயே இருந்து, முதல்வர் பணிகளை கவனித்து வருகிறார். எளிமையாக, அமைதியாக இருப்பதை எதிர்கட்சியினர் கிண்டல் செய்கின்றனர்.

செயல்படாத முதல்வரா?
முதல்வர் என்ற பந்தா இன்றி வலம் வருவது ஒருபுறம் இருக்க, அனைத்து அறிக்கையிலும் புரட்சித்தலைவி அம்மா புராணம்தான் வாசித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

விலை உயர்வுக்கு கண்டனம்
ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வது என விஷயங்களில், தமிழக அரசு அமைதி காத்தது.
அதே போல, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க, உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சகாயம் கமிஷனை, விரைந்து செயல்பட விடாமல் முடக்க வேண்டும் என்று நினைத்த உயர்நீதிமன்றத்தில் குட்டு வாங்கியது என பல விசயங்களில் எதிர்கட்சிகள் முதல்வரை வசைபாடினர்.

பினாமி முதல்வரா?
செயல்படாத நிர்வாகத்துக்கு சொந்தக்காரர், பொம்மை முதல்வர், டம்மி முதல்வர், பினாமி முதல்வர், இரட்டை ஆட்சி நடக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
ஆனால், அதற்கும் கூட, பன்னீர்செல்வம் பதில் கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்தார்.

முமுக போராட்டம்
முதல்வர் பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சிகள் இப்படி கடுமையாக விமர்சிப்பது சரியல்ல என, முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதோடு நில்லாமல் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதன் நிறுவனத் தலைவர் சேதுராமன், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, அறிக்கை வெளியிட்டார்.

அடக்கத்தின் மறு உருவம்
முதல்வர் பன்னீர்செல்வத்தை, காமராஜருக்கும், அண்ணாவுக்கும் இணையாக ஒப்பிட்டிருந்தார். ஆணவம், பணிவு எதுவுமில்லாமல், அடக்கத்தின் மறு உருவமாக இருந்து, அவர் செயல்படுவதை விரும்பாமல், சிலர் அவரை கேலி செய்கின்றனர் என, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பன்னீர் செல்வம் ஆலோசனையா?
'பன்னீர்செல்வம் ஆலோசனையின் பேரில் தான், ஜாதிய இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், திடீரென அறிக்கை விட்டிருக்கிறது' என, சிலர் கிளப்பிவிட, அதிகார மேலிடத்தில் இருப்பவர்களுக்கு பொறி தட்டியுள்ளது.

முதல்வர் ஜாக்கிரதை
பன்னீர்செல்வம், முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட பின்னர், இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிவிடக் கூடாது என்பதால் தான், உறவினர்களைக் கூட, அதிகம் சந்திப்பதை தவிர்த்து வருகிறார். ஒரு மாதம் கழித்து சொந்த ஊர் போன போது கூட நெருங்கிய உறவினர்களை கூட தவிர்த்து விட்டார்.

தொடரும் நிழல்கள்
தேவர் ஜெயந்திக்கு போன போது கூட தேவையற்ற சால்வைகள், மாலைகளை ஒதுக்கிவிட்டார். எனினும் முக்குலத்தோர் ஜாதி பின்புலத்தில் பன்னீர்செல்வம் செயல்படுகிறாரா என, சந்தேகம் ஏற்படவே, அவரை நிழல் போல பின்தொடரவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

பதவிக்கு சிக்கல்?
இந்த நிழல்கள் தாங்கள் சேகரித்த தகவல்களை அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு, கொடுப்பதை வைத்துதான், பன்னீர்செல்வம் முதல்வராக தொடருவாரா என்பது தெரிய வருமாம்.

பக் பக் நிலையா?
ஒருவித பயநிலையிலேயே பதவியில் இருக்கும் பன்னீர் செல்வத்திற்கு புதுவித சிக்கல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications