களத்தில் இறங்கிய துர்கா ஸ்டாலின்.. திமுக நிர்வாகிகளுடன் தீவிர பிரச்சாரம்! பரபரக்கும் தேர்தல் களம்
மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள சூழலில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள். குறிப்பாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக களமிறங்குகிறது.

திமுக
தமிழ்நாடு முழுக்க திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். மேலும், திமுக நிர்வாகிகள், அமைச்சர்களும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போது பிரச்சார களத்தில் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் இணைந்துள்ளார்.
துர்கா ஸ்டாலின்
நேற்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் துர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சீர்காழி தனித் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் துர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். சீர்காழி தொகுதி திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த முறை செந்தில் செல்வன் போட்டியிடுகிறார். அவர் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகவே துர்கா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட பழையார், மடவாமேடு, திருமலைவாசல் ஆகிய மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்ற துர்கா ஸ்டாலின் அங்குத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார். மடவாமேடு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின், அங்கு மக்களிடம் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் துர்கா ஸ்டாலின் உடன் ஆர்வமாகப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
பிரச்சாரம்
மேலும், அவர் தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். அங்குள்ள ஸ்ரீ செல்ல காளியம்மன் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அங்கும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கிருந்த மக்கள் சிலர் கோரிக்கை மனுக்களைக் கொடுத்த நிலையில், அதையும் பெற்றுக் கொண்டார். தேர்தல் முடிந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
வீடுவீடாக சென்ற துர்கா ஸ்டாலின் பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த குழந்தைகளையும் அவர் தூக்கிக் கொஞ்சினார். இதில் திமுக பொறுப்பாளர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications