ஜாமர் டீம் + கோர் டீம்.. கோட்டை முதல் நீலாங்கரை வரை.. ஜெயலலிதாவை மிஞ்சிய முதல்வர் விஜய்யின் கான்வாய்
சென்னை: முதல்வர் விஜய்யின் கான்வாய் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முதல் நீலாங்கரை வரை உள்ள 18 கிலோமீட்டர் தூரம் கடுமையான போக்குவரத்து நெரிசலிலும், மக்களின் அவதியிலும் சிக்கித் தவித்தது.
தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்திற்குச் செல்லும் வழி நெடுகிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியிருந்தன. 18 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைகளின் இருபுறமும் சுமார் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை முதல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், போலீசார் கால்கடுக்க நின்றிருந்த காட்சி பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.
18 கி.மீ. தூரத்திற்கு 800 போலீசார்: கால்கடுக்க நின்ற அவலம்
ஒவ்வொரு முக்கிய சந்திப்புகளிலும், குறுக்குச் சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. முதல்வரின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கைகள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்வை வெகுவாகப் பாதிக்கின்றன.
ஜெயலலிதாவையே மிஞ்சிய கான்வாய்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில், அவர் செல்லும் பாதைகளில் மிக நீண்ட வாகன அணிவகுப்பு (Convoy) மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பது வழக்கம். அப்போது அது 'அரச மரியாதை' அல்லது 'பாதுகாப்பு அச்சுறுத்தல்' என நியாயப்படுத்தப்பட்டது. அதன்பின் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியிலும் நீண்ட கான்வாய் இருந்தது.

நீதிபதி ஒருவரின் கேள்வியை தொடர்ந்து இந்த கான்வாய் நீளம் குறைக்கப்பட்டது.. ஆனால், தற்போதைய முதல்வர் விஜய்யின் கான்வாய், ஜெயலலிதாவின் காலத்தையே மிஞ்சிவிட்டதாக அரசியல் விமர்சகர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
சுமார் 25-க்கும் மேற்பட்ட அதிநவீன வாகனங்கள், முன்னே செல்லும் பாதுகாப்பு வாகனங்கள், பின் தொடரும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் என இந்த அணிவகுப்பு நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு "மக்கள் முதல்வர்" என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விஜய், இவ்வளவு பிரம்மாண்டமான கான்வாயை பயன்படுத்துவது அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீக் ஹவரில் சிக்கிய மக்கள்: அலுவலகம் செல்வோர் கதறல்
முதல்வரின் பயணம் சரியாக 'பீக் ஹவர்' எனப்படும் மக்கள் வேலைக்குச் செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களிலேயே அமைவதுதான் மிகப்பெரிய சாபக்கேடாக மாறியுள்ளது. காமராஜர் சாலை, மெரினா கடற்கரை சாலை, அடையார் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) ஆகிய பகுதிகள் முழுவதுமாக முடக்கப்பட்டன.
இதனால், குறித்த நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, கடும் வெயிலில் இருசக்கர வாகனங்களில் காத்திருந்த மக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட நெரிசலில் சிக்கியதைக் கண்டு ஆவேசமடைந்தனர். "மக்கள் நலனுக்காகத் தான் முதல்வர் என்றால், அந்த மக்களுக்கே இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன்?" என்பதே பலரின் ஆதங்கமாக உள்ளது.
மோடி, அமித்ஷா பாணியில் வாகனங்களைக் குறைப்பாரா விஜய்?
எரிபொருள் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அண்மைக் காலங்களில் தங்களது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்கள் பயணத்திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எரிபொருள் சிக்கனம் மற்றும் மக்கள் வரிப்பணம் வீணாவதைத் தடுக்க, ஆடம்பரமான அணிவகுப்புகளைத் தவிர்த்து, எளிமையான முறையில் பயணம் செய்வதே ஒரு சிறந்த தலைவருக்கு அழகு.
திரையில் "மக்களின் நாயகனாக" வலம் வந்த விஜய், நிஜ வாழ்விலும் மக்களின் சிரமங்களைப் புரிந்து கொண்டு, தனது பாதுகாப்பு வளையத்தை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்றி அமைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications