"கூட்டணி ஆட்சி"- பாஜக பிடியில் அதிமுக! 2006-ல் 'மைனாரிட்டி' திமுக அரசுக்கு கூட இப்படி சோதனை வரலையே!
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெற்ற ஒரு சில நாட்களிலேயே 'கூட்டணி ஆட்சி' விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்; பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டுக்குப் பிந்தைய தேர்தல்களில், பொதுவாக பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெறுவது வழக்கம். அதன் கூட்டணி கட்சிகள் கணிசமான இடங்களைப் பெறும். ஆனாலும் கூட்டணி ஆட்சி என்ற பேச்சு பொதுவாக எழுந்தது இல்லை.

கூட்டணி ஆட்சியும் இடதுசாரிகளுக்கான வாய்ப்பும்
1971-ம் ஆண்டு திமுக கூட்டணியில் திமுக மட்டுமே 184 இடங்களைப் பெற்றது. 1977-ல் அதிமுக மட்டுமே தனித்து 130 இடங்களைக் கைப்பற்றியது. 1980-ல் அதிமுக 129 இடங்களைப் பெற்றது. இந்த தேர்தல்களில் இடதுசாரிகள் இரு கட்சிகளின் கூட்டணிகளில் இடம் பெற்று 10-க்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்ற போதும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை.
1984-ல் 61 இடங்களில் வென்ற காங்கிரஸ்
1984-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 132 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 61 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அப்போதும் கூட தமிழக ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்கவில்லை.1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக 150 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான சிபிஎம் 15 வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் திமுக ஆட்சியிடம் இடதுசாரிகள் அதிகாரப் பகிர்வை கோரவே இல்லை.
ராஜீவ் படுகொலை அலையிலும் அதிகாரப் பகிர்வை பேசலை
1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பேரலை வீசியதில், அதிமுக 164 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளையும் கைப்பற்றியது. ராஜீவ்காந்தி அனுதாப அலையால் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி இத்தகைய பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ஆனாலும் காங்கிரஸ் கட்சி அப்போது, முதல் முறையாக முதல்வரான ஜெயலலிதாவை அச்சுறுத்தியோ நிர்பந்தித்தோ ஆட்சி அதிகாரப் பகிர்வை கேட்கவே இல்லை. காங்கிரஸ் கட்சியானது அப்போது, அதிகாரத்தில் பகிர்வு கேட்டிருந்தாலும் ஜெயலலிதா கொடுத்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கலாமா? இல்லையா? என்பது வேறு விவாதம்.
மூப்பனார் நினைத்திருந்தால் அதிகாரப் பகிர்வு
இதேநிலைமைதான் 1996-ம் ஆண்டும்.. முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய அதிருப்தி அலை. அப்போது காங்கிரஸ் கட்சியை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் உருவாக்கி இருந்தார்; ரஜினிகாந்த் இந்த கூட்டணியை ஆதரித்திருந்தார். 1996-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வீழ்த்தப்பட்டு திமுக 167 இடங்களைக் கைப்பற்றியது; மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் 39 இடங்களில் வென்றது. சிபிஐ கூட 8 இடங்களில் வெற்றி பெற்றது. மூப்பனார் நினைத்திருந்தால் கருணாநிதியிடம் ஆட்சி அதிகாரப் பகிர்வை கேட்டிருக்க வேண்டும்.. ஆனால் மூப்பனார், அதிகாரத்தில் பங்கு எதுவும் கேட்கவில்லை.
தமாகா, பாமகவுக்கு கிடைத்த வாய்ப்பு
2001-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் இன்னும் சிக்கலானதாக இருந்தன. அதிமுக பெரும்பான்மைக்கு அதிகமாக 132 இடங்களைக் கைப்பற்றியதுதான். ஆனால் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் 23 இடங்களையும் பாமக 20 எம்.எல்.ஏக்களையும் வைத்திருந்தன. அப்போதும் ஜெயலலிதாவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா நிறுவனர் மூப்பனார் கேட்கவில்லைதான்.
2006-ம் ஆண்டு தேர்தல் களம்
இதனைவிட விந்தை ஒன்று 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடந்தது. 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் இடம் பெற்றிருந்தன. அதிமுக அணியில் மதிமுக, விசிக இடம் பெற்றன. நடிகர் விஜயகாந்தின் தேமுதிக முதல் முறையாக தேர்தலை சந்தித்தது.
பெரும்பான்மை பெறாத திமுக
2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக தாம் போட்டியிட்ட 132 தொகுதிகளில் 96 இடங்களில்தான் வென்றது. காங்கிரஸ் கட்சி 34, பாமக 18, சிபிஐ 6, சிபிஎம் 9 இடங்களில் வென்றது. தமிழ்நாட்டில் பெரும்பான்மைக்கு தேவையான 117 இடங்களைப் பெற முடியாத நிலையில்தான் திமுக இருந்தது.அதிமுக கூட்டணியில் 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 61; மதிமுக 6; விசிக 2 இடங்களில் வென்றன. விஜயகாந்தின் தேமுதிக 1 இடத்தில் வெற்றி பெற்றது.
மைனாரிட்டி திமுக அரசு- கூட்டணி ஆட்சி பேச்சே இல்லையே
இந்த தேர்தல் முடிவுகள் அடிப்படையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக தொங்கு சட்டசபை அமைந்தது. இதனை பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி அமைவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்தன. ஆனால் காங்கிரஸ், பாம்க, இடதுசாரி கட்சிகளோ திமுக தலைமையில் ஆட்சி அமைவதற்கு ஆதரவை மட்டும் தந்தன. அதிகாரத்தில் பங்கு கேட்கவிலை. அப்போது பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் அமைச்சரவையில் இடம் கேட்டிருந்தால் திமுக கொடுத்துதான் ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இந்த கட்சிகள் அனைத்தும் 5 ஆண்டுகளும் முழுமையான ஆதரவை திமுகவுக்கு தந்தன. திமுக முதல் முறையாக 'கருணாநிதியின் மைனாரிட்டி' அரசாங்கம் என விமர்சனத்தை தாங்கியது.
பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக விஜயகாந்த்
2011-ம் ஆண்டு தேர்தல் களமும் இதேபோலதான்.. அதிமுக 146 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக 29 இடங்களிலும் வென்றது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த திமுக வெறும் 23 இடங்களில்தான் வென்றது. இதனால் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தது. திமுகவின் இடத்துக்கு தேமுதிக வந்து நின்றது. அப்போது விஜயகாந்த் நினைத்திருந்தால், அதிமுகவுடன் கூட்டணி ஆட்சிக்கான பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கலாம். ஆனால் விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமே இருந்தார்.
அதிமுக அதகளம்
2016-ம் ஆண்டு 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளிலும் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களிலும் வென்றன. அந்த தேர்தலில் திமுக- காங்கிரஸ் தவிர பெரும்பாலான கட்சிகள் தனித்தே களம் கண்டதால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே எழவும் இல்லை.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத 2021 தேர்தல்
2021-ம் ஆண்டு தமிழ்நாடு தேர்தல் களம் மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் இருபெரும் அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதா, கருணாநிதி மறைந்துவிட்ட பின்னர் நடந்த தேர்தல். தமிழ்நாட்டில் மிகப் பெரும் அரசியல் வெற்றிடம் உருவாகிவிட்டதாக கட்டமைக்கப்பட்ட பிரசாரம் தீவிரமாக நடந்தது.
2021 தேர்தல் களம் எப்படி இருந்தது?
2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் என பெரும்பாலான கட்சிகள் இடம் பெற்றன. மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்றதால் பாஜகவின் பிடியில் சிக்கிய அதிமுக, பாம்க உள்ளிட்டவை ஒரு கூட்டணியாக இடம் பெற்றன. இந்த தேர்தலில் முதல் முறையாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் களம் கண்டது.
கூட்டணி ஆட்சிக்கு நிர்பந்திக்காத கட்சிகள்
2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக 133, காங்கிரஸ் 18, இடதுசாரிகள் 4, விசிக 4 என மொத்தம் 159 இடங்களில் அந்த கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருந்தாலும் காங்கிரஸும் இன்ன பிற கட்சிகளும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை; அதிகாரப் பகிர்வு குறித்து பேசவில்லை.
பாஜக பிடியில் அதிமுக- கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி?
தமிழ்நாட்டின் அரசியல் பின்னணி இப்படி இருக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது முதலே, 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் "தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு" அமையும் என்கிறது பாஜக. அண்மையில் சென்னையில் அமித்ஷா- எடப்பாடி சந்திப்பின் போதும், அமித்ஷா இதனையே வலியுறுத்தினார். அப்போது வாய்மூடி மவுனியாக இருந்த எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென விழித்துக் கொண்டு, அதிமுகதான் ஆட்சி அமைக்கும்; கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது; அமித்ஷாவும் அப்படி எல்லாம் சொல்லவில்லை என பல்டி அடிக்க முயற்சிக்கிறார். எடப்பாடியின் இந்த அந்தர் பல்டி எல்லாம் அமித்ஷாவிடமும் பாஜகவிடமும் செல்லுபடியாகுமா? அதற்கு முன்னர் ஆட்சி அமைப்பதற்கான இடங்களை பாஜக- அதிமுக கூட்டணி பெறுமா? என்கிற கேள்விகளும் களத்தில் நிற்கின்றன.












Click it and Unblock the Notifications