காதலுக்காக மாணவர் கடத்திக் கொலை- திருச்சியில் கொடூரம்- கால்வாயில் பிணம் கண்டெடுப்பு
திருச்சி:திருச்சியில் காதல் பிரச்சினைக்காக கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
சனிக்கிழமை அன்று கடத்தப்பட்ட அம்மாணவரின் சடலம் ஜீயபுரம் அருகிலுள்ள ஒரு வாய்க்காலில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
கொலைசெய்யப்பட்ட விதுகரன் என்னும் அவ்வாலிபர்,திருச்சி அருகிலுள்ள உறையூர் சீனிவாசன நகர் ஸ்ரீதரன் என்பவர் மகனாவார்.
திருச்சியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் அக்கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலியின் சகோதரியை அதே கல்லூரியில் பயிலும் தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவர் காதலித்து வந்துள்ளது விதுகரனுக்கு தெரியவந்தது.
இதையடுத்து விதுகரன் அரவிந்தை கண்டித்துள்ளதாகவும், இதனால் இரண்டு நாட்களாக அவ்விருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது..
இந்நிலையில் சனிக்கிழமை இரவு தனது ஆதரவாளர்களுடன் விதுகரன் வீட்டிற்கு சென்ற அரவிந்த் அங்கு விதுகரனை உருட்டு கட்டையால் தாக்கி அவரை காரில் கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக தனது மகனை கண்டுப்பிடித்து தருமாறும், கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விதுகரனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் அக்கல்லூரியில் பயிலும் மற்றொரு மாணவர் உறையூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் தினகரன் என்பவரை பிடித்த விசாரித்ததில், அரவிந்தன் உள்ளிட்ட 5 பேர் விதுகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து, அவரது சடலத்தை ஜீயபுரம் அருகிலுள்ள கொடிங்கால் வாய்க்காலில் வைக்கோலால் மூடி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜீயபுரம் சென்ற போலீஸார் அங்கு விதுகரன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தினகரனை கைது செய்த போலீஸார் மற்றவர்களை தேடிவருகின்றனர்.
காதலுக்காக நடந்த இந்த கொடூர கொலை கல்லூரி மாணவர்களின் தவறான போக்கு பற்றிய பயத்தை கடுமையாக பெற்றோர் மனதில் விதைத்துள்ளது.












Click it and Unblock the Notifications