மதுவுக்கு எதிரான தொடர் போராட்டம்: சென்னை கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
சென்னை: மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் தீவிரமாகப் பங்கேற்று வருவதையடுத்து சென்னையில் சில கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தியவாதி சசிபெருமாளின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முழு மது விலக்கை செயல்படுத்தக் கோரி நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அழைப்பு விடுத்திருந்தன.

இதை ஏற்று தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்கள், நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நந்தனம் அரசு கலைக் கல்லூரியும், பச்சையப்பன் கல்லூரியும் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ளன. கல்லூரி மீண்டும் நாளை திறக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
