கம்யூனிஸ்ட் கட்சியில் கலகம்.. தா.பாண்டியன் மீது அடுக்கடுக்கான 'முறைகேடுகள்' புகார்!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் மீது அடுக்கடுக்கான கணக்கு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் தம் மீதான புகார்களை கட்சித் தலைமை நிராகரித்துவிட்டது என்று தா. பாண்டியன் விளக்கமும் கொடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலரான தா.பாண்டியன் சர்ச்சைகளின் சங்கமம்... அதிமுகவுடனான கூட்டணி அமைப்பதற்காக அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரைப் போலவே பேசியும் செயல்பட்டும் வந்தவர்.
அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கழற்றிவிடப்பட்டபோது கதறி அழாத குறையாக மேடைகளில் கொட்டி குமுறி தீர்த்தார். இதேபோல் தா. பாண்டியன் பதவி காலத்தில்தான் கம்யூனிஸ்ட் தலைவர்கள்- தொண்டர்கள் சாதி ரீதியாக பிளவுபட்டதாகவும் சட்டவிரோத சக்திகள் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஊடகங்கள் எழுதிக் குவித்தன.
இந்த நிலையில் தா. பாண்டியன் மீது கணக்கு முறைகேடுகள் குற்றச்சாட்டு கட்சிக்குள் பகிரங்கமாக வெடித்துள்ளன.

திருச்சி நிலம்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமாக செயல்பட்டு வந்தது சவுத் மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன். இந்த சங்கம் 1973ஆம் ஆண்டே கலைக்கப்பட்டுவிட்டது.

கோடி மதிப்பிலான நிலம்..
இந்த சங்கத்துக்கு சொந்தமாக 5 ஆயிரம் சதுர அடி இடம் திருச்சியில் இருக்கிறது. இது கடந்த 2012-ல் ரூ20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் நிலையில் ரூ20 லட்சத்துக்கு மட்டும் தா.பா. ஏன் விற்பனை செய்தார் என்று பிரச்சனை கிளம்பியது.

கட்சி விசாரணை
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சுதகார ரெட்டியிடம் புகார் செய்யப்பட்டது. இதனால் கட்சி ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

தா.பா. மீது நடவடிக்கை
இந்த விசாரணையின் முடிவில் திருச்சி நிலம் விற்கப்பட்டதில் முறைகேடு நடந்தது என்று கூறப்பட்டதாகவும் அதனால் தா.பா. உள்ளிட்டோர் மீது கட்சி விதிப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று விசாரணைக் குழு பரிந்துரைத்திருக்கிறது என்கின்றனர் ஒருதரப்பினர்.

தா.பா. மறுப்பு
ஆனால் தா.பாண்டியனோ, தம் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு முடிவில் கட்சி அதனை நிராகரித்துவிட்டது என்கிறார்.

தி.நகர் பாலன் இல்லம்
இதேபோல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டியதிலும் முறைகேடு புகார் எழுந்துள்ளது.

புகார் மேல புகார்
பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு மாநிலக் குழுவில் முறையாக அனுமதி வாங்கவில்லை., கட்டிடம் கட்ட எந்தவொரு டெண்டரும் கோரப்படவில்லை. கட்சி அலுவலகம் கட்ட நிதி திரட்டப்பட்டதில் முறையான கணக்குகள் இல்லை என்றெல்லாம் புகார்கள் அடுக்கப்பட்டுள்ளன.

நன்கொடை நிதி
அதேபோல் வாங்கப்பட்ட நன்கொடை நிதிகூட கட்சி கணக்கில் வந்து சேரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த புகாரும் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு போயிருக்கிறது.

தா.பா. விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தா. பாண்டியன், " எங்கள் கட்சிக்கு வசூலிக்கப்படும் நிதி குறித்து விசாரிக்க தணிக்கைக் குழு உள்ளது. தனியாக ஆடிட்டர் இருக்கிறார். கட்சித் தலைமை அலுவலக கட்டிடம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் முழுமையாக கடன் வாங்கி கட்டப்பட்ட கட்டிடமாகும். இதில் எங்கு முறைகேடு வந்தது? என்கிறார்.
ஆக கம்யூனிஸ்ட் கட்சியில் கலகம் வெடித்திருக்கிறது!












Click it and Unblock the Notifications