ஜெ. சிகிச்சை அறிக்கைகளில் குளறுபடிகள்: விளக்கம் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்
சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் ஆளுநர் மாளிகை செயலாளர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரின் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அளித்த அறிக்கை மற்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குளறுபடிகள் உள்ளன.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி ஆணைய செயலாளர் ஆளுநர் மாளிகை செயாலளர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆளுநர் மாளிகை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை சம்பந்தமாக அரசு தரப்பில் இருந்தோ அல்லது அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் இருந்தோ எத்தனை மருத்துவக் குறிப்புகளை கவர்னர் மாளிகை பெற்றது?. அவ்வாறு பெறப்பட்ட மருத்துவ அறிக்கைகள் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யா சாகர்ராவுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டதா?.
அவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தால், அதுதொடர்பாக கவர்னர் பதில் அளித்தாரா?. ஜெயலலிதாவை மருத்துவமனையில் கவர்னர் பார்த்தது தொடர்பாக ஜனாதிபதி மாளிகைக்கு, கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் அனுப்பப்பட்டதா?.
ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் கவர்னர் மாளிகை இடையே கடிதத் தொடர்பு ஏதேனும் இருந்ததா?. அப்படி ஏதேனும் கடிதம் பெறப்பட்டிருந்தால் அது தொடர்பாக ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது தொடர்பான விளக்கத்தை ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கண்காணிக்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அளித்ததா?. அவ்வாறு அறிக்கை வழங்காமல் இருப்பின் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை, அமைச்சரவைக்கு அறிக்கை அனுப்பியதா?. ஜெயலலிதா உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து அவ்வப்போது அரசுக்கோ, கவர்னருக்கோ, மத்திய அரசுக்கோ, அப்போதைய பொறுப்பு முதல்வருக்கோ முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் அறிக்கை அளித்தாரா? என்பது குறித்த விளக்கத்தை ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications