தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுகவை தோற்கடியுங்கள்: ஜெயலலிதா
திண்டுக்கல்: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், கூறியதாவது:
''முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டது. அதேபோல், தமிழர்களுக்கு எதிராக அணைப் பாதுகாப்பு மசோதாவையும் கொண்டு வந்தது. காங்கிரசுடன் சில மாதங்களுக்கு முன்பு வரை அங்கம் வகித்த தி.மு.க.வும் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவில்லை.
தற்போதும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என தி.மு.க. கூறுவது ஏமாற்றும் செயல். எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
போடி ரயில் திட்டத்துக்கு நிதி
தொடர்ந்து ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். அப்போது அவர், மத்தியில் அதிமுக ஆதரவுடன் அரசு அமைந்தால், போடி ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார். முல்லைபெரியாறு விவகாரத்தில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததாகவும் விளக்கமளித்தார்.












Click it and Unblock the Notifications