பெண்களை கேவலப்படுத்துவதே இளங்கோவனின் கொள்கை.. விஜயதாரணி கடும் தாக்கு
சென்னை: பெண்கள் அரசியலில் இருக்கவே கூடாது என்பதுதான் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் கொள்கை. தமிழக காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கக் கட்சி என்று கடுமையாக தாக்கியுள்ளார் மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய தாரணி.
காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவனுக்கும், விஜயதாரணிக்கும் இடையே நடந்து வந்த கடும் மோதலில் தற்போது இளங்கோவன் வென்றுள்ளார். விஜயதாரணியிடமிருந்து மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி பிடுங்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்துள்ள அவர் முதல்வர் ஜெயலலிதாவை சட்டசபை வளாகத்தில் வைத்து சந்தித்தார். நேரில் பார்த்துப் பேச நேரமும் கேட்டுள்ளார். அவர் அதிமுகவில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு விஜயதாரணி கடுமையான பேட்டி கொடுத்துள்ளார். அதில் இளங்கோவனை காட்டமாக தாக்கியுள்ளார். அதிலிருந்து...

பெண்களுக்கு எதிரான கட்சி
தமிழக காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரான கட்சி. இளங்கோவனுக்கு பெண்கள் என்றாலே ஏளனம்தான். அவர்களை உயர் பதவியில் பார்க்கவே அவருக்குப் பிடிக்காது.

பெண்களை விரும்பாதவர் இளங்கோவன்
இளங்கோவனுக்கு பெண்கள் அரசியலில் உயர்வதே பிடிக்காது. இதனால்தான் பெண் அரசியல் தலைவர்கள் என்றாலே அவர் விஷம் கக்குகிறார். முதல்வர் ஜெயலலிதாவை அவர் கடுமையாக விமர்சிப்பதன் காரணமும் இதுதான்.

மக்கள் நம்பிக்கை போய் விட்டது
தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்களுடன் இணைந்து இணக்கமாக செயல்படுவதில்லை அவர். மக்களை விட்டு தலைவர்கள் விலகிப் போக இவர்தான் காரணம். மக்களின் நம்பிக்கையும் போய் விட்டது.

அறிக்கை தலைவர்
வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கைகளை மட்டுமே விட்டு வருகிறார் இளங்கோவன். அதுதான் அரசியல் என்று கருதி விட்டார் போலும். இதனால்தான் கட்சி அழிந்து போய் விட்டது.

ஒரு தலைபட்சமான முடிவு
என்னை பதவியிலிருந்து நீக்கும் முடிவை கட்சித் தலைமை எடுத்திருப்பதும் கூட ஒருதலைபட்சமான நடவடிக்கையாகும். இதில் அவர்கள் என்னிடம் விளக்கம் கேட்கவே இல்லை.

இளங்கோவனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா
இளங்கோவனுக்கு எதிராக எனது ஆதரவாளர்கள் புகார் கொடுத்ததுதான் பிரச்சினை என்றால் என் மீதும் கூட அவர்கள் எஸ்சிஎஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தார்களே. பிறகு ஏன் இளங்கோவனை நீக்கவில்லை.

ராகுலை சந்திப்பேன்
ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன். என்னை பதவியிலிருந்து நீக்கியது முற்றிலும் அநீதியானது.

சிறப்பாக செயல்பட்டேன்
நான் மகளிர் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றதற்கு பிறகு மகிளா காங்கிரஸ் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டது. நான் 300 நிர்வாகிகளை நியமனம் செய்தேன். சிறப்பான செயல்பாடுகள் மூலம் மகிளா காங்கிரஸ் வெளியே தெரிய ஆரம்பித்தது. நான் பிரபலமாக வளர்ந்தேன். இதை இளங்கோவன் விரும்பவில்லை.

தமிழிசைய விமர்சித்தவர்தானே இவர்
எப்போதுமே பெண்களுக்கு மரியாதை கொடுக்காதவர் இளங்கோவன். பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திராஜனை பற்றியும் தவறாக பேசினார். சத்தியமூர்த்தி பவனிலும், ராகுல் காந்தி வந்த போது விமான நிலையத்திலும் எனக்கு அவமரியாதை ஏற்படுத்தினார். தமிழ்நாடு காங்கிரசே அவரால் பெண்களுக்கு எதிரான அமைப்பு போல தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தால் பெண்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை
இந்த கட்சியில் நீடிக்க முடியுமா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள வேறு கட்சியில் சேர்ந்தால் என்ன தவறு இருக்கிறது என்று எண்ணிப்பார்க்கிறேன்.

அதிமுகதான் சாதகமான கட்சி
பெண்களுக்குப் பாதுகாப்பான கட்சி என்றால் அதிமுக மட்டும்தான். அந்த கட்சியில் வலுவான பெண் தலைவர் இருக்கிறார். கட்சியானாலும் சரி, ஆட்சி ஆனாலும் சரி, பெண்கள் சம்பந்தமாக புகார் வந்தால் ஜெயலலிதா கடுமையான நடவடிக்கை எடுக்கிறார்.

நான் குழந்தையாக இருந்தப்ப இருந்தே
நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே முதல்வர் ஜெயலலிதா எப்போதும் எனக்கு உந்து சக்தியாக இருந்து உள்ளார். நான் சட்டசபையில் எப்போது பேசினாலும் என்னை ஊக்கப்படுத்துவார். இதன் காரணமாக நான் சத்தமாக குரல் எழுப்புவேன். நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன். எப்போதும் நான் அவர்மீது மரியாதை வைத்துள்ளேன். அவரை சந்திப்பதற்காக நான் காத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயதாரணி.












Click it and Unblock the Notifications