வழக்கம் போல வழவழ.. நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி நாளைக்குதான் முடிவாம்- திருநாவுக்கரசர் திடீர் பல்டி
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளைதான் முடிவெடுக்கப் போவதாக திடீரென பல்டி அடித்திருக்கிறது காங்கிரஸ்.
சென்னை: சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளைதான் முடிவெடுப்போம் என திடீரென தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது. நாளை அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துகிறது. இதற்கு வசதியாக சட்டசபை கூட்டம் நாளைக்கு கூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் காங். எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொறடா உத்தரவை மீறினால் எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகும் வாய்ப்பு கூட உண்டு என்பதால் காங்கிரசின் 8 எம்.எல்.ஏக்களும் நாளைய கூட்டத்தில் பங்கேற்பர்.
நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும் கூட 18 எம்.எல்.ஏக்கள் முரண்டுபிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒவ்வொரு எம்.எல்.ஏவின் ஓட்டும் முக்கியம் என்பதால் காங்கிரஸ் கட்சியும் இவ்வாறு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக திமுக அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டமும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிப்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் பெயரிலான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால் தாம் ட்விட்டரையே பயன்படுத்தவில்லை; அது தவறான தகவல். இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லிக்கு தெரிவிக்கப்படும். நாளை காலை 9 மணிக்கு மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வழக்கம் போல காங்கிரஸ் கட்சி வழவழ கொலகொலதான்!












Click it and Unblock the Notifications