கழுதை தேய்ந்து கட்டெறும்பான காங்கிரஸ் கதை!

Subscribe to Oneindia Tamil

-ஆர் மணி

இந்தியா முழுவதும் இதுவரையில் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி பலவீனமான நிலையில் தவிக்கிறது.

நாடு விடுதலை பெற்ற பின்னர் இந்த 68 ஆண்டுகளில் இந்தளவுக்கு காங்கிரஸ் கட்சி பலவீனமாகிப் போனதில்லை. 1975 - 77 ம் ஆண்டுகளில் அவசர நிலையைப் பிரகடனப் படுத்தி, ஜனநாயகத்தை தன்னுடைய காலின் கீழ் போட்டு மிதித்து, ருத்ரதாண்டவம் ஆடிய இந்திரா காந்தி, மார்ச் 1977 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோற்று போனார். இந்திரா காந்தியே கூட தோற்றுப் போனாலும் கூட காங்கிரஸ் கட்சி 189 இடங்களில் வெற்றிப் பெற்றது.

1999 மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத காங்கிரஸ் 114 இடங்களில் வென்றது. ஆனால் 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இதனை விட கூடுதல் இடங்கள் காங்கிரசுக்கு இருக்கின்றது என்பது விநோதமானதுதான். மக்களவையில் காங்கிரசுக்கும் அஇஅதிமுக வுக்கும் வித்தியாசம் வெறும் 7 சீட்டுக்கள்தான். ஆம். காங்கிரசுக்கு 44 என்றால் அம்மா கட்சிக்கு 37.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் வரும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் - மேற்கு வங்கம், தமிழ் நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் - காங்கிரஸ் என்ன மாதிரியான செயற் திட்டத்துடன் தேர்தலை அணுகப் போகிறதென்பது சுவாஸ்யமான விஷயமாகவே இருக்கின்றது. முதலில் மேற்கு வங்கத்தைப் பார்க்கலாம்.

இடதுசாரிகளிடம் 35 ஆண்டுகாலம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், பின்னர் கடந்த ஐந்தாண்டுகளாக காங்ரசிலிருந்து கத்தரித்துக் கொண்டு வெளியேறிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் துவக்கிய மமதா பானர்ஜியிடம் தற்போது கூட்டணி சேர மன்றாடிக் கொண்டிருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கும் இடது சாரிகள், குறிப்பாக சிபிஎம் தற்போதய தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் தேர்தலில் போட்டியிடத் தயாரென்று அறிவித்திருப்பதுதான். இரண்டு கட்சிகளும் காங்கிரசுக்கு ஆசை வார்த்தை காட்டினாலும் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் அவர்கள் ஒதுக்கும் குறைந்த சீட்டுக்களை பெற்றுக் கொண்டு பக்க வாத்தியம் வாசிக்கும் நிலைதான் காங்கிரசுக்கு என்பதுதான் யதார்த்தம்.

Congress losing 5 states permanantly

ஆகவே நாற்பதாண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மறுபடியும் அங்கு ஆட்சியைப் பிடிப்பது அறவே சாத்தியமற்றதென்பதுதான் யதார்த்தம்.

அடுத்தது கேரளா. இங்கு மாறி, மாறி காங்கிரசும், இடது சாரிகளும் ஆட்சியை பிடித்தாலும் இந்த முறை காங்கிரஸ் கேரளாவில் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை. ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையும் கேரள மக்கள் ஆட்சியை மாற்றினாலும், இந்த முறை நிலைமை மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஒரு சின்ன ஆறுதல்.... இங்கு வளர்ந்து வரும் பாஜக அதிகளவில் சிபிஎம்மின் வாக்குகளைத்தான் பிரிக்கப் போகிறது என்பதால் காங்கிரஸ் சற்றே ஆறுதல் கொள்ளலாம். ஆனாலும் நிலைமை மோசம்தான்.

அடுத்தது அசாம். இங்குள்ள மொத்த 14 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிளில் பாஜக அமோக வெற்றிப் பெற்று 36.5% வாக்குகளையும் அள்ளியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அசாமை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் தற்போது ஆட்டங் கண்டு கொண்டிருக்கின்றது. அசாமை இழப்பது வட கிழக்கு மாநில அரசியிலில் காங்கிரசுக்கு மிகப் பெரிய பின்னடைவைத் தான் ஏற்படுத்தும். இந்த முறை போடோ அமைப்புடன் ஏற்கனவே தேர்தல் உடன்பாட்டினை எட்டி விட்ட பாஜக, அசாம கன பரீஷத்துடனும் அநேகமாக தேர்தல் உடன்பாட்டினை எட்டும் நிலையை நோக்கி மெதுவாகவும், அதே சமயத்தில் உறுதியாகவும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆகவே அசாமில் இந்த முறை ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ததிங்கிடதோம் போட்டுக் கொண்டிருக்கின்றது காங்கிரஸ்.

அடுத்தது புதுச்சேரி யூனியன் பிரதேசம். இங்கு ரங்கசாமி காங்கிரசின் பிரதிநிதிதான் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் வென்று எம் பி யானார். ஆனால் நிச்சயம் சட்டமன்றத் தேர்தலில் அந்த மரியாதையை பாஜக வுக்குக் கொடுக்க மாட்டார். இருந்த போதிலும் இங்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பது குதிரை கொம்பு.

கடைசியாக தமிழகம். அந்தோ பரிதாபம். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில்தான் காங்கிரஸ் மிக, மிக பலவீனமாக இருந்து கொண்டிருக்கின்றது. 1989 ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜி.கே. மூப்பனாரின் நிர்பந்தத்தால் தனியாக நின்று தன்மானம் காத்த காங்கிரஸ் பெற்ற இடங்களோ வெறும் 26 தான். ஆனால் 26 சத விகித வாக்குகள் காங்கிரஸூக்கு இருந்தன. தற்போது 2014 ல் இது வெறும் 4 சதவிகித அளவுக்கு சுருங்கியிருப்பது சோனியா மற்றும் ராகுலின் கைங்கர்யம் என்றும் கூறலாம்.

1967 ல் திமுக விடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் அடுத்தாண்டு தமிழகத்தில் ஆட்சியை இழந்ததன் பொன் விழாவை விமர்சையாக கொண்டாடவதற்கான படு மும்முரமான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் வேறேந்த மாநிலத்திலும் அரை நூற்றாண்டுக் காலம் மாநிலத்தில் ஆட்சியில் இல்லாமல் காங்கிரஸ் இருந்ததில்லை. இந்த அற்புத சாதனையை காங்கிரஸ் நிகழ்த்த தமிழகம் தான் இந்தியாவின் பழைமையான கட்சிக்கு நல் வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

2011 ல் திமுக வை மிரட்டி சோனியா காந்தி 63 இடங்களை வாங்கினார். ஒரு கட்டத்தில் காங்கிரசுடனான கூட்டணி முறிந்தது என்றே கருணாநிதி அறிவித்தார். ஆனால் பின்னர் 48 மணி நேரத்தில் நிலைமை மாறியது. 63 இடங்களை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்த திமுக தலைவர் அவர்களை 63 நாயன்மார்கள் என்றும் வருணித்தார். ஆனால் முடிவு படுமோசமாக இருந்தது. திமுக வை உருட்டி, மிரட்டி, 63 சீட்டுக்களை வாங்கினார் சோனியா காந்தி. காரணம் 2ஜி வழக்கு.

ஒரு நாள் அண்ணா அறிவாலயத்தில் கீழ் தளத்தில் திமுக காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடந்தது. அதே நாள் அதே நிமிடங்களில் மற்றோர் தளத்தில் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளிடம் சிபிஐ 2ஜி வழக்கு சம்மந்தமாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. மற்றோர் தளத்தில் கலைஞர் தொலைக் காட்சியில் அமலாக்கப் பிரிவு 2ஜி வழக்கு சம்மந்தமாக விசாரணையை மேற்கொண்டிருந்தது. இந்த அற்புத காட்சிகள் எல்லாம் அரங்கேறியும் காங்கிரஸ் வெற்றி பெற்றதோ வெறும் ஐந்து இடங்களில்தான்.

இப்போதைய நிலைமையும் அந்தோ பரிதாபம் எனும் அளவுக்குதான் இருக்கிறது. கடந்த முறை கருணாநிதியை உருட்டி, மிரட்டி வாங்கிய 63 இடங்களை காங்கிரஸ் இந்த முறை கனவு கூட காண முடியாது. அதிகபட்சம் திமுக 20 இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கினால் அதுவே பெரிய விஷயம்தான். மற்ற மாநிலங்களில் பக்க வாத்தியம் என்ற நிலைமையாவது இருக்கிறது. தமிழகத்தில் அதுகூட கிடையாதென்பதே உண்மை.

போகிற போக்கைப் பார்த்தால், இன்னும் பத்தாண்டுகளுக்கு காங்கிரஸ் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெரியளவுக்கு எழுந்திருக்க முடியாதென்பதுதான் நிதர்சனம். 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் செய்த பல நல்ல காரியங்களை - தகவல் அறியும் உரிமை சட்டம், தேசீய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், மாணவர்களுக்கான வங்கிக் கடன் வசதிகள் - உள்ளிட்ட பலவற்றை 2ஜி, காமென்வெல்த் போன்ற பகாசுர ஊழல்கள் முற்றிலுமாக மறைத்து விட்டன.

சோனியா காந்திக்கு வயதாகிக் கொண்டிருக்கின்றது. அவரது உடல் நலமும் நன்றாக இல்லை. ராகுல் காந்தி இன்னமும் ‘ஒரு தயக்கமான தலைவ'ராகத்தான் இருந்து கொண்டிருக்கின்றார். நரேந்திர மோடியின் ஆளுமை இன்னமும் கவர்ச்சிகரமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. இன்னமும் மோடி இளைஞர்களை ஈர்க்கும் தலைவராகவே இருந்து கொண்டிருக்கின்றார்.

இந்த ஐந்து மாநிலங்களில் பெரியளவில் பாஜக வெற்றி பெற முடியாவிடாவிட்டாலும், காவிக் கட்சிக்கு கிடைக்கக் கூடிய ஒவ்வோர் எம்எல்ஏ சீட்டும் அதற்கு லாபம்தான். காரணம் பாஜக இந்த ஐந்து மாநிலங்களிலும் பூஜ்யத்திலிருந்ததான் மேலே முன்னேறி வருகிறது. அவர்களுக்கு கிடைப்பது எல்லாமே லாபம்தான். ஆனால் காங்கிரசின் நிலைமையோ கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைமைதான். அனேகமாக அம்மாவும், மகனும், நூற்றி முப்பதாண்டு கால காங்கிரஸ் கட்சிக்கு இறுதி சடங்குகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையல்ல!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+