7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் வெளிநடப்பு
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் 110-ன் கீழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட வேலூர் சிறையில் உள்ள நளினியும் விடுதலை செய்யப்படுவார் எனவும் அவருடன் ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுவிக்கப்படுவார்கள் என முதல்வர் அறிவித்துள்ளார். 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் 3 நாட்களில் மத்திய அரசு பதிலளிக்காவிடில் தமிழக அரசே 7 பேரையும் விடுதலை செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்துள்ளதை அடுத்து வழக்கறிஞர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் விதியில் இடமில்லை என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய, அவர்கள், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்வதால் தீவிரவாதம் தலைதூக்கும் என்று கூறினர். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தாகவும் அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications