மகளை நடுரோட்டில் அடித்து உதைத்த சப்.இன்ஸ்பெக்டர்: சமூகவலைத்தளங்களில் கண்டனம்
பெங்களூரு: சப். இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகள் காதலிக்கிறாள் என்ற சந்தேகத்தில் நடு ரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அடித்து உதைத்து தர தரவென இழுத்துச் சென்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான படங்கள் முகநூலில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தலை குனிவு சம்பவத்துக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து உதைக்கும் படங்களை வெளியிட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
| Post by Nivedita Niv. |
யார் அந்தப் பெண்
சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமின் மகளான சூர்யா என்ற அந்தப் பெண்ணுக்கு வயது 20-25 இருக்கலாம். ராஜாராம் தன் மகள் சூர்யாவை உல்சூரில் நடுச்சாலையில் அடித்து உதைத்ததை பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியில் 2 பேர் சூர்யாவுக்கு உதவி, காப்பாற்றியதோடு போலீசுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

காதலிப்பதாக சந்தேகம்
சூர்யா ஒருவரைக் காதலிக்கிறார் என்ற வதந்தியையடுத்து "மகளுக்கு பாடம் கற்பித்ததாக" இன்ஸ்பெக்டர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. சூர்யாவின் தாயார் ஒரு ஆசிரியை. இவரும் தன் மகளுக்கு உதவ முன்வரவில்லை.

திருமணம் செய்ய முடிவு
பெங்களூருவில் பணியாற்றி வரும் சூர்யா, காதல் வதந்திகளை மறுத்துள்ளார். பெங்களூரிலிருந்து சூர்யாவை மதுரைக்கு அழைத்துச் சென்று அங்கு தாங்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் கவுன்சிலிங்
சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் காவல்துறை உயரதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையே மகள் சூர்யா தன்னைக் காப்பாற்றிய இருவருடன் காரில் பதுங்கியிருந்தார்.
அந்தப்பெண்ணையும், பெற்றோரை உல்சூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இளம் பெண்ணை காப்பாற்றிய நிவேதிதா சக்ரவர்த்தி அதிர்ச்சி விலகாமல் அந்த சம்பவத்தை விவரிக்கிறார்.

நடுரோட்டில் அடித்து
"நானும் எனது தோழி அர்ச்சனாவும் அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ரோட்டில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை அவளது தந்தையும் மதுரையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை அந்த பெண்ணின் தாய்(பள்ளி ஆசிரியை) வேடிக்கை பார்த்துக்கொண்டு கணவருக்கு ஆதரவாக அந்த பெண்ணை அவர் பங்கிற்கு குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டாயே என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.

தடுத்த தந்தை
இந்த சம்பவத்தை அந்த ரோட்டில் சென்றவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.நான் இளம் பெண்ணை அடித்த நபரின் பிடியில் இருந்து தலை முடியை விடுவித்தேன். அதற்குள் அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். அந்த நபரை பின்னால் தள்ளிவிட்டு எனது காரில் அந்த பெண்ணை ஏற்றினேன். ஆனால் அந்த நபர் காரின் முன்பகுதியில் அமர்ந்து கொண்டு காரை எடுக்கவிடாமல் தடுத்தார்.

வலுக்கட்டாய திருமணம்
இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து 3 பேரையும் அல்சூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அந்த பெண் யாரையோ விரும்புவதாகவும், இதுபற்றி அறிந்த தந்தை நடுரோட்டில் அவரை தாக்கி உள்ளார். அந்த பெண் என்ன சொல்ல வருகிறார் என்றுகூட அவர் கேட்கவில்லை. மாறாக வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மதுரைக்கு இழுத்து சென்று தாங்கள் விரும்பும் நபருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த இந்த செயலில் ஈடுபட்டு உள்ளதாக நிவேதிதா சக்ரவர்த்தி கூறினார்.

தலைகுனிவு சம்பவம்
போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது சம்பந்தப்பட்ட 3 பேரும் இது எங்கள் குடும்ப விவகாரம் நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம் என்று கூறிவிட்டதாகவும் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
உல்சூரில் நடுரோட்டில் அதுவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மகளை அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பு செய்தால் தட்டி கேட்கும் அதிகாரம் படைத்த பதவியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், எத்தனையோ மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியை ஆகியோர் தங்கள் மகளை இப்படி நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் உண்மையிலேயே ஒரு தலை குனிவு சம்பவம்தான் என்று பலரும் முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications