ஜல்லிக்கட்டு: 13 காளைகளை அடக்கி மோட்டார் சைக்கிள் பரிசு பெற்ற போலீஸ்காரர்
மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்து வந்த 500-க்கும் மேற்பட்ட காளைகளை சிங்கம் போல் சீறிப் பாய்ந்து காளையர்கள் அடக்கினர்.
அலங்காநல்லூரில் வியாழக்கிழமை உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை, திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 595 காளைகள் பதிவு செய்யப்பட்டன.
அதுபோல, காளைகளுடன் விளையாடுவதற்காக 516 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில் 7 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. அதுபோல, பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 32 பேர் அனுமதிக்கப்படவில்லை.

சீறிப்பாய்ந்த காளைகள்
வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியது. களத்தில் இருந்த வீரர்களுக்கு முதல்வர் படம் பொறித்த பனியன்கள் வழங்கப்பட்டன. அதை அணிந்துகொண்டு வீரர்கள் களத்தில் இறங்கினர். முதலில் கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

தங்கம், வெள்ளி பரிசு
காளையின் உரிமையாளர் மற்றும் ஊரை முதலில் அறிவித்த விழா கமிட்டியாளர்கள் காளையின் தரத்தை வைத்து தங்கக்காசு, பீரோ, பிரிஜ், சைக்கிள், கைக்கடிகாரம், பாத்திரம், பேக் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அறிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் பரிசு
அதிக காளைகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிள்கள் காத்திருக்கு. நின்று விளையாடும் சிறந்த காளைக்கும் இரண்டு சக்கர வாகனம் உண்டு என்பதை விழா கமிட்டியாளர்கள் அடிக்கடி அறிவித்து களத்தில் இருந்த வீரர்களை உசுப்பேற்றினர்.

வாடி வாசலில் வீர இளைஞர்கள்
களத்தில் இருந்த இளைஞர்கள் அறிவிப்பைக் கேட்டதும் பரிசுப் பொருட்களை அள்ளிச் செல்வதற்காக வாடிவாசலிலேயே காத்திருந்தனர். பின்னர் வெளியே வந்த காளைக்கு இணையாக இளைஞர்களும் காளைபோல மோதினர்.

காளைகளுக்கும் பரிசு
சில நேரங்களில் இளைஞர்கள் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளிச் சென்றனர். காளைகள் வெற்றி பெற்ற நிலையில், அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

49 பேர் காயம்
போட்டியில் பங்கேற்ற வீரர்களில் 49 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறிய காயம் அடைந்த வீரர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேன் ஆப் த ஜல்லிக்கட்டு
சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதியில், சிறந்த வீரராக மதுரை காவல்துறையில் பணிபுரிந்து வரும் வினோத்ராஜ் என்பவர் 13 மாடுகளைப் பிடித்து பரிசுகள் பெற்றதோடு, மேன் ஆப் த ஜல்லிக்கட்டு பட்டம் பெற்று இருசக்கர வாகனத்தை பெற்றார்.

காளைகளை கண்டு பொங்குவேன்
மோட்டார் சைக்கிள் பரிசு பெற்றது பற்றி கூறும் வினோத்ராஜ்க்கு ஜல்லிக்கட்டில் மாடுபிடிப்பது என்றால் தனி விருப்பமாம். இவர் சொந்தமாக 5 காளைகளை வளர்த்து வருகிறார். மாடுகளை பிடிப்பது எப்படி என்று தனி பயிற்சியே பெற்றுள்ளார் இவர். வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகளை அதன் போக்கிலேயே விட்டு பிடிப்பதுதான் இவரின் தனி ஸ்டைலாம்.

சிறந்த காளை இல்லை
ஜல்லிக்காட்டில் நின்று பாயும் காளைக்கு மோட்டார் சைக்கிள் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் 588 காளைகளில் ஒரு காளை கூட சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட வில்லை. இதனால் காளை உரிமையாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

சரிந்த காலரி
செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலரி போட்டியின் நடுவே திடீரென லேசாக சரிந்தது. இதில் யாருக்கும் காயமில்லை. உற்சாகத்துடன் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு விழாவில் உள்ளுர் பொதுமக்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பங்கேற்று வீர விளையாட்டினை கண்டு ரசித்தனர்.












Click it and Unblock the Notifications