புதுமணப்பெண் வெட்டிக் கொலை: மாயமான டிரைவரை தேடும் போலீசார்
சென்னை: புது மணப்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவான கொலையாளியை 6 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை குமரன் நகர் நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரேகா, இவர் திருமணமான 3 மாதத்தில் துண்டு துண்டாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
ரேகா மீது மாதவரத்தை சேர்ந்த டிரைவர் சாம்சனுக்கு ஏற்பட்ட ஒருதலைக் காதலே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னரும் ரேகாவை விரட்டி விரட்டி காதலித்த சாம்சன், "உனது கணவனை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அவர் இதுபற்றி குடும்பத்தினருடன் சென்று மாதவரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சாம்சனை அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதன் பின்னர் 3 மாதங்கள் காத்திருந்து, திருமணம் முடிந்த பின்னர் ரேகாவை, கடத்திச் சென்று சாம்சன் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 1ம்தேதி மாயமான ரேகா, 3ம்தேதி அன்று போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். எனவே அவரை கடத்திச் சென்ற சாம்சன், எங்காவது அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதன் பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக கூறு போட்டு சாக்கு மூட்டையில் கட்டி சாம்சன் ஏரியில் வீசியுள்ளார்.
இக்கொலையை அவர் மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், 2 அல்லது 3 பேர் அவருக்கு உதவிகள் செய்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
ரேகாவை கொன்று விட்டு தப்பிய சாம்சன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைப் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.
சென்னையில் இருந்து தப்பிச் சென்ற சாம்சன், புதுவைக்கு சென்று அங்கிருந்து கோவைக்கு சென்றதாக கூறப்படுகிறது. சாம்சனை கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் சாம்சன் பிடிபடுவார் என்றும், அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் தெரிவித்தார்.
சாம்சன் சிக்கினால் மட்டுமே, ரேகாவை கடத்திச் சென்று அவரை எங்கு வைத்து கொலை செய்தார்? அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications