விழுப்புரம்: ரயில் தண்டவாளத்தில் விரிசல் தென்மாவட்ட ரயில்கள் தாமதம்

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. திண்டிவனம் ரயில் நிலையத்தில் வழக்கம்போல் சிறிது நேரம் நின்று மீண்டும் கிளம்பியது. சுமார் 3 கி.மீ. தூரம் சென்றபோது திடீரென தண்டவாளத்தில் அதிர்வு ஏற்பட்டது. அதனை உணர்ந்த என்ஜின் டிரைவர் ரயில் வேகத்தை குறைத்தார்.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பிறகு ரயிலை மெதுவாக ஓட்டிச்சென்று அந்த இடத்தை கடந்தார்.
மயிலத்தை அடுத்த மோழியனூர் பகுதியில் சென்றபோது, அந்த இடத்திலும் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்தும் விழுப்புரம் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த இடத்தையும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மெதுவாக கடந்து சென்றது.
தென்மாவட்ட ரயில்கள் நிறுத்தம்
தண்டவாள விரிசல் பற்றி கேள்விப்பட்டதும் அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை, ராமேசுவரம், முத்துநகர், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் விழுப்புரத்தில் இருந்து ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் திண்டிவனம் பகுதிக்கு விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்தனர். உடனடியாக இந்த இடங்களில் இரும்பு பிளேட் பொருத்தி தற்காலிகமாக தண்டவாளத்தை சீரமைத்தனர்.
பின்னர் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். .
தண்டவாளத்தில் 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டிருந்தை ரயில் என்ஜின் டிரைவர் தக்க சமயத்தில் கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications