தொடரும் பயங்கரம்... கோவையிலும் பட்டாசு கிடங்கில் தீ விபத்து… ஒருவர் பலி- 6 பேர் படுகாயம்!
கோவை: கோவை காந்தி பூங்கா அருகில் உள்ள பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை காந்தி பூங்கா அருகில் உள்ளது கே.பி.ஆர். ஐஏஎஸ் அகாடாமி. இரண்டு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஏஎஸ் பயிற்சித் தேர்வை எழுதிக் கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் பட்டாசு கடைகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்தக் கட்டடத்தின் ஒரு அறையில் பட்டாசு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளி நேரமாக இருப்பதால் இந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கு தீபாவளி பட்டாசுகளை பரிசாக வழங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பட்டாசு வைக்கப்பட்ட இடத்தில் இருந்து தீ உருவானதா அல்லது மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவான காரணம் எதுவும் இன்னும் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட உடன் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி தேர்வு எழுதிக் கொண்டிருந்த இருந்த மாணவர்கள் பலர் மயங்கி விழுந்துள்ளனர். மேலும், 2 பெண்கள் உள்பட 6 பேர் மாணவர்கள் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள கரும்புகை காரணமாக கட்டடத்திற்கு உள்ளே எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
நேற்றுதான் சிவகாசி பட்டாசு கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவையில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications