வர்தா புயல், மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு- 3வது நாளாக மின்சாரம் இன்றி தவிப்பு
சென்னை : வர்தா புயல், மழைக்கு இதுவரை 23 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3வது நாளாக சென்னை, புறநகர்வாசிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
சென்னை: வங்க கடலில் உருவான வர்தா புயல் திங்கட்கிழமை மாலை சென்னையை கடந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த புயல் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டு கடந்து சென்றுள்ளது.
திங்கட்கிழமை காலை முதலே 110 கிலோ மீட்டரில் இருந்து 125 கிலோ மீட்டர் வரை காற்று வீசியது. புயல் கரையைக் கடந்த போது 190 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. மரங்கள் பேயாட்டம் ஆடின.
காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து 10 மணி நேரம் வரை வீசிய இந்த புயல் காற்றால் சென்னை மாநகரிலும், புறநகர் பகுதிகளிலும் இருந்த பல்லாயிரக்கணக்கான பேயாட்டம் ஆடின.

வேரோடு சாய்ந்த மரங்கள்
புயல் காற்றின் வேகத்திற்கு வளைந்து சமாளித்த மரங்கள் தப்பித்தன. அதே நேரத்தில் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத பல மரங்களின் கிளைகள் ஒடிந்து காற்றில் பறந்தன. ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.

மின்சாரம் துண்டிப்பு
புயல் மழை தொடங்கும் போதே திங்கட்கிழமை காலையிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. சுமார் 10 ஆயிரம் மின் கம்பங் கள், 450 டிரான்ஸ்பார்மர்கள் பழுதானதால் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 48 மணி நேரத்திற்கு மேலாகியும் சென்னையில் மின் விநியோகம் இன்னமும் சீராகவில்லை.

23 பேர் பலி
மக்கள் அனைவரும் நாள் முழுவதும் வீடுகளுக்குள்ளேயே இருளில் முடங்கிக் கிடந்தனர். இந்த புயலுக்கு இதுவரை 23 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 27 பெண்கள் உள்பட 172 பேர் காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் 10,432 பேர் 97 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.

மின்விநியோகம் சீராகவில்லை
சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் 48 மணிநேரத்திற்கு மேலாகியும் மின் விநியோகம் சீராகவில்லை. இரண்டு நாட்களாக மக்கள் இருளில் அவதிப்பட்டு வருகின்றனர். செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டதால் சென்னைவாசிகள் தொடர்பற்றவர்களாகிவிட்டனர்.

3வது நாளாக மக்கள் தவிப்பு
புயல் காற்று தொடர்ந்து வீசியதன் பலனாக சென்னையில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அதனால் மக்கள் பயந்தவாறு மழை வெள்ளம் எங்கும் தேங்கவில்லை எனினும் மின்சாரம் இல்லாத காரணத்தினாலும், மரங்கள் முறிந்து விழுந்திருந்த காரணத்தினாலும் பெரும்பாலான கடைகள் மூடியே காணப்படுகின்றன. மின்சாரம் இல்லாததால் மோட்டார்களை இயக்க முடியாமல் தண்ணீர் இன்றியும், போதுமான குடிநீர் கிடைக்காமலும் மக்கள் அவதிப்பட்டனர்.

இயல்பு நிலை திரும்புவது எப்போது?
கடந்த ஆண்டு வெள்ளம் தேங்கியதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப ஒருமாதமானது. இந்த ஆண்டு வெள்ளம் இல்லாவிட்டாலும் சாலைகளில் விழுந்த மரங்கள் ஓரங்களில் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சரிசெய்யப்பட்ட பின்னரே மின்விநியோகம் சீராகும். இயல்பு நிலை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications