ஓகி புயல் ஓடிய பின்பும் நீடிக்கும் கனமழை: ஸ்தம்பித்த கன்னியாகுமரி
ஓகி புயல் அரபிக்கடலுக்கு நகர்ந்த பின்னரும் குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் நிலவுகிறது.
கன்னியாகுமரி: ஓகி புயல் ஓய்ந்தாலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீசிய சூறாவளி காற்றுக்கு ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மூன்றாவது நாளாக இருளில் மூழ்கியுள்ளது குமரி மாவட்டம்.

குடியிருப்புகளில் வெள்ளம்
ஓகி புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் திருப்பதிசாரம் தேரூர் சானலில் நேற்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமாகி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. கோட்டார் ஊட்டுவாழ்மடம், வடசேரி பகுதியிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்
திடீரென வெள்ளம் சூழ்ந்து வீடுகளைச் சுற்றி தண்ணீர் இருந்தாலும் குடிநீர் இன்றி தவித்து வருவதாக மக்கள் கூறியுள்ளனர். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுக்காகவும், பாலுக்காகவும் அலைந்து வருவதாகவும் மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

சிக்கித்தவிக்கும் மீட்பு
நள்ளிரவில் தண்ணீர் வந்ததால் வீடுகளில் இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காவல்துறை, தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

படகுகளில் மீட்பு
வீடுகளில் தஞ்சம் அடைந்தவர்களை நாட்டு படகு, ரப்பர் படகுகளில் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வெள்ளத்தில் மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.

ஓயாத மழை
ஓகி புயல் ஓய்ந்த பின்னரும் மழை ஓய்ந்தபாடில்லை. இதனால் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 3 நாட்களாக இருளில் சிக்கித் தவிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஓகி புயல் பத்திரம் மக்களே
இதனிடையே மீட்பு நடவடிக்கைகளை பேரிடர் மீட்புக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். புயலால் சேதமடைந்த கட்டிடங்கள் வீடுகளுக்குள் தங்கவேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications