சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்து கணவன், மனைவி பலி
சென்னை: சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தம்பதியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார் பேட்டை முத்தமிழ் நகரில் சி.பிளாக்கில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (42). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி துளசி (35). பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவர்களுக்கு பிரதீப் என்ற மகனும், முத்துசெல்வி என்ற மகளும் உள்ளனர். பிரதீப் நெல்லையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து பள்ளியில் படித்து வருகிறார். முத்துசெல்வி மட்டும் பெற்றோருடன் தங்கி இருந்தார்.
வாடகை வீட்டில் கீழ் தளத்தில் சுப்பிரமணி குடும்பத்துடன் வசித்து வந்தார். கீழ்தளத்திலேயே இன்னொரு பகுதியில் வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணன் வசித்து வந்தார். மாடியில் 2 வீடுகள் உள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சுப்பிரமணியின் வீட்டில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அப்போது சுப்பிரமணியன் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் இடிந்து கிடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் வாசலில் சுப்பிரமணியும், துளசியும் உடல் சிதைந்து கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து போலீசாரும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். 2 பேரின் உடலையும் பார்த்து பெண்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
மகள் முத்துசெல்வியை தேடி போலீசாரும், பொது மக்களும் வீட்டுக்குள் சென்றனர். அப்போது கட்டிலுக்கு அடியில் அவர் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியதில் முத்துசெல்வியின் இடுப்பு எலும்பு முறிந்தது. உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுப்பிரமணியின் வீட்டுக்கு பின்னால் தனியாக வசித்து வந்த உரிமையாளர் கிருஷ்ணன் வீடும் இதில் சேதமடைந்தது. அவரும் தீக்காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருவருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காசி மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியபோது, முத்துசெல்வி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். அப்போதுதான் அவர் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. கட்டிலுக்கு அடியில் படுத்திருந்ததால் பலத்த காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் முத்துசெல்வி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பலர் தங்களது வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர்களை கழற்றி எடுத்து வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்து வைத்தனர்.
சிலிண்டர் வெடித்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications