பொட்டு சுரேஷ் கொலையில் விசாரிக்கப்பட்ட தயாநிதி அழகிரியின் நண்பருக்கு அரிவாள் வெட்டு
மதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நண்பர் ராம்கி (எ) ராமகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று மர்ம நபர்களால் அவர் சராமரியாக வெட்டப்பட்டார்.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான பொட்டு சுரேஷ், மு.க. அழகிரியிடம் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். 2011-ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது. மதுரையில் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. இதற்கு அழகிரியின் நடவடிக்கைகளே காரணம் என கூறப்பட்டது.

பொட்டு சுரேஷ் மற்றும் அட்டாக் பாண்டி உள்ளிட்ட சிலரது நடவடிக்கைகள் தான் மதுரை மாவட்டத்தில் திமுகவின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்பட்டது. இதன் பின்னரும், அழகிரியிடம் பொட்டு சுரேஷின் செல்வாக்கு குறையவில்லை. ஆனால், அட்டாக் பாண்டியால் முன்புபோல அழகிரியிடம் நெருங்க முடியவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.
இச்சூழ்நிலையில், 2013 ஜனவரி 31-ம் தேதி மதுரை டிவிஎஸ் நகரில், கும்பலால் பொட்டு சுரேஷ் கொலை செய்யப் பட்டார். இதுதொடர்பாக அட்டாக் பாண்டி உட்பட 18 பேர் மீது சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இரண்டுவருடமாக தலைமறைவாக இருந்து வந்த. அட்டாக் பாண்டியை கடந்த செப்டம்பர் மாதம் மும்பையில் போலீஸார் கைது செய்தனர். அட்டாக் பாண்டியை போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே, பொட்டு கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் இருக்கும் 17 பேரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நண்பர் ராம்கி (எ) ராமகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று இரவு, புதூர் பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள், ராம்கியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் ராம்கி பலத்த காயமடைந்தார். ராம்கி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications