அதிமுக ஆட்சியில் ‘சிலவகைக் குற்றங்களின் எண்ணிக்கை’ குறைந்தது சாதனையல்ல...: கருணாநிதி
சென்னை: அதிமுக ஆட்சியில் சில வகைக் குற்றங்கள் குறைந்ததை பெரிய சாதனையாக எடுத்துக்கொள்ள முடியாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொஅர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சரின் அறிவிப்புகள்...
முதலமைச்சரின் அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவது பற்றி ஒரு உதாரணம் கூறுங்களேன்?.
3-5-2012 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் காவல் துறையிலே உள்ளவர்களுக்கு "உங்கள் சொந்த இல்லம்" என்ற திட்டத்தின் கீழ் 36 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 10 ஏக்கர் நிலமும், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் 100 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய்து தரப்படும் என்றும், இதன் மூலம் காவல் துறையினர் தமக்கென சொந்த வீடு கட்ட இயலவில்லை என்ற குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, மக்கள் சேவையில் காவல் துறையினர் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வழிவகுக்கும் என்றும் அறிவித்தார்.

2.5 ஆண்டுகளுக்குப் பிறகு...
அறிவித்து 2.5 ஆண்டுகள் ஆகின்றன. 36 ஆயிரம் குடியிருப்புகளில் எத்தனை ஆயிரம் கட்டி முடிக்கப்பட்டு காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளன என்று பெருமையோடு முதல்வர் பேரவையில் அறிவித்திருக்கிறார். அதாவது 36 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு ஜெயலலிதாவின் அரசு "ஒப்பளிப்பு" வழங்கியுள்ளதாம். மேலக்கோட்டையூரில் 2,673 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறதாம். திட்டத்தை அறிவித்து 2.5 ஆண்டுகளுக்கு பிறகு நிலைமை இதுதான்.

குற்றங்களின் எண்ணிக்கை...
கடந்த 3 ஆண்டு காலத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?.
பதில்:- 2014-2015-ம் ஆண்டுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் வைத்துள்ள கொள்கை விளக்க குறிப்பு பக்கம் 151-152ல் வந்துள்ள விவரப்படி 2012ல் மொத்த இ.த.ச. வழக்குகள் 2,00,474. 2014ல் 2,03,579 வழக்குகள். அதே பக்கத்தில் தலைப்பு வாரியாக வந்துள்ள விவரங்களைக் கூற வேண்டுமேயானால், 2012ல் வழிப்பறி குற்றங்கள் 1,898; 2013ல் 2,186. கன்னக் களவு 2012ல் 4,457; 2013ல் 5,125. கொலை முயற்சி குற்றங்கள் 2012ல் 2,954; 2013ல் 3,007. கற்பழிப்பு குற்றங்கள் 2012ல் 737; 2013ல் 923. வரதட்சணை மரணங்கள் 2012ல் 110; 2013ல் 118. ஆள் கடத்தல் குற்றங்கள் 2012ல் 252; 2013ல் 263. மோசடிக் குற்றங்கள் 2012ல் 4,151; 2013ல் 4,647. பிற இ.த.ச. குற்றங்கள் 2012ல் 71,500; 2013ல் 76,313.

சாதனையல்ல...
இந்த புள்ளி விவரங்களைப் பார்த்தால் குற்றங்கள் அதிகரித்திருப்பதை காணலாம். ஆனால் வேறு சில வகை குற்றங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குற்றங்கள் குறைவாக இருக்கலாம். எனவே இதனை பெரிய சாதனையாக எடுத்துக்கொள்ள முடியாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications