இரட்டை இலை, கட்சியும், கொடியும் எல்லாம் எமக்கே... தீபாவின் அபார நம்பிக்கை!
தீபா பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்தில் 5,52,000 பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கட்சியும், கொடியும், இரட்டை இலை சின்னமும் நமக்கே கிடைக்கும் என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் உலக தொண்டர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னணி நிர்வாகிகள், திரட்டி அளித்திட்ட 5,52,000 (ஐந்து லட்சத்து ஐம்பது இரண்டாயிரம்) பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளோம் என்று தீபா கூறியுள்ளார்.
அதிமுக கட்சியும், கொடியும், இரட்டை இலை சின்னமும் நமக்கே கிடைக்கும் என்று தீபா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தீபா வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக ஜெ.தீபா அணி மற்றும் எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வெற்றியோடு துவக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கம்.

துரோகிகளால் கட்சியில் பிளவு
அஇஅதிமுக எனும் நமது உயிர் மூச்சான கழகத்தினை ஜெயலலிதா அவர்களால் மாபெரும் வெற்றி இயக்கமான இந்திய பூபாளத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கி நம்மிடம் இயக்கத்தினை ஒப்படைத்து மறைந்த நிலையில் துரோகிகளால் இயக்கம் பிளவு பட்டு தேர்தல் ஆணையத்தில் முடிவுகளாகி காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளதை நினைத்து மிகவும் வேதனை யுற்றுள்ளேன்.

அதிமுக தொண்டர்கள்
இந்நிலையில் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்று உண்மையான தொண்டர்கள் அழைத்ததின் பேரில் நான் அரசியல் காலத்தில் அம்மாவின் உண்மையான விசுவாச தொண்டர்களுக்காக வந்துள்ளேன். டாக்டர் புரட்சித் தலைவர் நமக்கு வகுத்து தந்த அஇஅதிமுக சட்ட விதிகளின் படி அடிப்படை அதிமுக தொண்டர்களால் தேர்வு செய்யப்படுகிறவர்கள் தன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதே கட்சி அடிப்படை விதி.

தேர்தல் ஆணையத்திடம் தாக்கல்
தேர்தல் ஆணையம் நமக்கு உரிய கால அவகாசம் அளித்திட்ட நிலையில் நாடு முழுவதும் உலக தொண்டர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள், முன்னணி நிர்வாகிகள், திரட்டி அளித்திட்ட 5,52,000 (ஐந்து லட்சத்து ஐம்பது இரண்டாயிரம்) பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளோம்.

தேர்தல் ஆணையம் ரத்து செய்க
அதிகாரத்தை கையில் வைத்துள்ளவர்கள் கூட நமது எண்ணிக்கைக்கு குறைவான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர், தேர்தல் ஆணையத்தில் நமது அஇஅதிமுக(ஜெ.தீபா )அணி சார்பில் நமது கழக வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்களின் பெயரில் 2 வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ளோம். அஇஅதிமுக சட்ட விதி 43க்கு புறம்பாக இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ததை தேர்தல் ஆணையம் ரத்து செய்திட வேண்டும்.

தீபா பேரவை கோரிக்கை
அஇஅதிமுக சட்ட விதிகளின் படி ஒன்றரை கோடி தொண்டர்களால் புதிய பொதுச்செயலாளர் தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையமே, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் முன்னின்று அஇஅதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று அணியின் கோரிக்கையாக வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.

தேர்தல் ஆணையத்தில் முறையீடு
தொடர்ந்து 5 முறை டெல்லிக்கு நமது அணியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் சிறப்பாக வாதாடியுள்ளோம். தற்போது உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை மட்டும் கணக்கில் வைத்து தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்க கூடாது.

மக்கள் ஆதரவு நமக்கே
1977 முதல் இன்றுவரை உள்ள ஏராளமான முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், முன்னாள் மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், ஊராட்சி பஞ்சாயத்து தலைவர்கள் வரை ஏராளமானோர் நமது அஇஅதிமுக (ஜெ.தீபா) அணியைத்தான் ஆதரிக்கிறார்கள்.

கட்சியும் கொடியும் நமக்கே
இது போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியல்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததோடு அதிமுக கட்சியையும் கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் நமக்கு கிடைப்பதற்கு பலவகையான முக்கியமான சான்று ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளோம்.

தேர்தல் ஆணையத்தில் இறுதி விசாரணை
இந்திய தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயக முறையில் தன்னிச்சையான சுயமான அமைப்பாகும்,ஆகவே 6.10.2017 அன்று இறுதி விசாரணை நடைபெற்ற பிறகு நமது வழக்கின் நல்ல தீர்ப்பை தேர்தல் ஆணையம் நமக்கு ஆதரவாக வழங்கும்.

நமக்க நல்ல செய்தி
நாடு போற்றும் வகையில் அஇஅதிமுக கட்சியையும் கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் நமது அஇஅதிமுக(ஜெ தீபா) அணிக்கு வெற்றி வாகை சூடிடும் வகையில் அளித்திடும் நல்ல தீர்ப்பை நாடும் ஏடும் போற்றும் வகையில் நமக்கு வெற்றி செய்தியினை வரவிருக்கிறது என்பதை புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications