அதிமுக உறுப்பினர் அட்டையை ஒப்படைத்த தீபா ஆதரவாளர்கள்! மன்னார்குடி கோஷ்டி மீது பாய்ச்சல்!!
தீபாவின் ஆதரவாளர்கள் இன்று அதிமுக உறுப்பினர் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திவாகரன், நடராஜன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியன்று அரசியலின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பேன். அன்று முதல் எனது அரசியல் பயணத்தை வேகமாக தொடங்குவேன். இனி மக்கள் பணிக்காக என் காலத்தை செலவிட உள்ளேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக கூறியுள்ளார்.

தீபாவின் முடிவினை தெரிந்து கொள்வதற்காக இன்று அவரது ஆதரவாளர்கள் தி. நகரில் தீபாவின் வீடு முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் சசிகலாவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக இருந்தோம் என்று திவாகரன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினர். இப்போது பேசும் நடராஜன் ஐந்து மாதத்திற்கு முன்பு ஜெயலலிதா உயிரோடு இருந்த போது பேசியிருக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.
அதிமுகவினர் உறுப்பினர்கள் கார்டுகளை ஒப்படைத்து விட்டு தீபாவின் வழி நடக்கப் போவதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.
மக்கள் ஆதரவு தீபாவிற்கு மட்டுமே என்று கூறினர். தீபா எந்த தொகுதியில் நின்றாலும் எங்களின் ஆதரவை அளிப்போம், ஜெயிக்க வைப்போம் என்றும் கூறினர். மன்னார்குடி குடும்பத்தை அடித்து விரட்டுவோம் என்றும் சசிகலாவின் தலைமையை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இன்று எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தீபா அஞ்சலி செலுத்த சென்ற போதே பெண்கள் அனைவரும் தீபாவின் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு இருந்தனர்.
இதனிடையே சென்னை தாம்பரத்தில் அதிமுகவினர் - ஜெ.தீபா ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த திருமண மண்டபத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட அதிமுகவினருடன் ஜெ.தீபா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications