பாஜக எதிர்ப்பு வியூகம்:முதல்வர் மு.க.ஸ்டாலின்- கெஜ்ரிவால் சந்திப்பு! பஞ்சாப் முதல்வரும் பங்கேற்பு!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சென்னையில் இன்று சந்தித்தார். அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதாவை தோற்கடிக்கவும் முதல்வர் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தால் டெல்லி யூனியன் பிரதேச அரசின் உரிமை பறிபோகும் என்பது ஆம் ஆத்மி கட்சியின் வாதம். இந்த அவசர சட்டத்துக்கு பதில் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாஜக அரசு முயற்சிக்கும். அப்போது ராஜ்யசபாவில் இம்மசோதாவை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தோற்கடிக்க வேண்டும் என முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ராஜ்யசபாவில் இம்மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் கெஜ்ரிவால். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி உள்ளார் கெஜ்ரிவால் .
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை விமான நிலையத்துக்கு இன்று மாலை வருகை தந்த கெஜ்ரிவால் மற்றும் பகவத் மான் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் இல்லத்துக்கு கெஜ்ரிவால், பகவந்த் மான் உள்ளிட்டோர் அடங்கிய குழு சென்றது. இந்த சந்திப்பின் போது அதிகாரிகள் நியமனம் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என ஆதரவு கேட்டார் கெஜ்ரிவால்.
முன்னதாக கெஜ்ரிவால் உள்ளிட்ட குழுவினருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எம்பிக்கள் டிஆர்பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications