ரூபாய் நோட்டுகளுக்கு தடை.. டிச. 31 வரை எல்லா நோட்டும் செல்லனும்.. சிபிஐ போராட்டம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: டிசம்பர் 31ம் தேதி வரை அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈட்டனர்.

கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. உடனடியாக, ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுக்களை மத்திய அரசுக்கும், மோடிக்கும் தெரிவித்தனர். மக்களே கூட சில இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். ஆனால், நடந்தது என்ன? பாராட்டிய அரசியல் கட்சித் தலைவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு ஜர்க்கடித்து மிக லேசாக திட்டத் தொடங்கினார். நடவடிக்கை நல்லதுதான். மக்கள் பாதிக்கப்படுவதுதான் என்று இழுத்தார்கள். பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள் வங்கியின் முன்பு வரிசையில் நிற்கும் போது அனிச்சையாக மத்திய அரசைத் திட்டத் தொடங்கினார்கள்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வங்கியிலும் பணமில்லை. ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் இல்லை. மக்களிடமும் பணம் இல்லை என்ற நிலையில் கடுமையான சில்லறை நோட்டுகளுக்கு தட்டுப்பாடு எழுந்தது. குறிப்பாக, 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு எழுந்தது. எதைப்பற்றியும் கவலை இல்லை என்ற ரீதியில் மத்திய அரசு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை பழைய ரூபாய் மாற்றுவது தொடர்பாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்; பழைய ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 31 வரை செல்லும்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; கருப்பு பணத்தை ஒழிப்பதாகக் கூறி சாதாரண ஏழை, எளிய மக்களை பரிதவிக்க விடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் போது முன் வைக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications
