ஒரு பக்கம் வாட்டி எடுக்கும் வெயில்! மறுபக்கம் மழை! அதுவும் இடி மின்னலுடன்! கிளைமேட் எப்படி இருக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெயில் பொளந்து கட்டும் நிலையில், மறுபுறம் சில இடங்களில் நல்ல மழை இருக்கிறது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும் மாநிலத்தில் ஏற்கனவே பல இடங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாகவே இருக்கிறது. இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பம் மிக மோசமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

கடந்த பிப். மாதமே வழக்கத்தைக் காட்டிலும் வெப்பம் உச்சம் தொட்டது. வரும் காலங்களில் வெப்பம் அதைவிட மோசமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் அப்போதே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இடையில் சில நாட்கள் மழை பெய்தாலும் கூட, மீண்டும் வெப்பம் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது.
வாட்டும் வெப்பம்: இதனிடையே இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ள வானிலை மையம், வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நேற்றைய தினமே 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவானது.. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று 101.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதைத் தொடர்ந்து கரூர் பரமத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது மட்டுமின்றி, வேலூர், திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கோவை என மொத்தம் 7 மாவட்டங்களில் வெப்பம் சதமடித்திருந்தது.
மழையும் இருக்கு: வெப்பம் ஒரு பக்கம் உச்சமடைந்திருந்த அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் தூத்துக்குடி எட்டையபுரத்தில் 50 மிமீ மழையும், செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் 40 மிமீ மழையும் பெய்துள்ளது. இது தவிர மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஏப்ரல் 10) தென் தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஏப்ரல் 10) தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஏப்ரல் 12 முதல் 14 வரையிலான நாட்களில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications