ஒகேனக்கல் அருவியில் பரிசலுக்கு அனுமதி.. ‘வெள்ள அபாயம் இல்லை’.. சுற்றுலா பயணிகளுக்கு செம கொண்டாட்டம்!
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து 20 ஆயிரம் கன அடிக்கு அதிகமாக இருந்ததால் பரிசல் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நீர்வரத்து 6,000 கன அடியாக குறைந்ததால் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.

கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தமிழ்நாடு கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருந்துகொண்டிருந்தது.
இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும் நீர்வரத்து வெகுவாக அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,000 கன அடியாக குறைந்ததால் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 8 மணியளவில் 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்தது. இன்று நிலவரப்படி நீர்வரத்து 6,000 கன அடியாக சரிந்துள்ளது. இதையடுத்து, பரிசல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications