பராமரிப்பு பணிகளுக்காக நடுவழியில் நிறுத்தப்பட்ட திண்டுக்கல் - திருச்சி பாசஞ்சர் ரயில்; பயணிகள் அவதி
திண்டுக்கல்: திண்டுக்கல் - திருச்சி பாசஞ்சர் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நேற்று பாதிவழியில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர்.
நெல்லையில் இருந்து தினமும் காலை 5.20 மணிக்கு திருச்சி வழியாக திருநெல்வேலி- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் இந்த ரயில் காலை 11.15 மணிக்கு திண்டுக்கல் வந்தது.

இந்தநிலையில் திண்டுக்கல்-திருச்சி இடையே பாலம் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும் என்றும், பயணிகள் அனைவரும் இறங்குமாறும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் இந்த ரயிலில் திருச்சி, மயிலாடுதுறை செல்வதற்காக இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பயணிகள் அனைவரும் ரயில் நிலைய மேலாளரிடம் கேட்டனர். இதற்கு அவர் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று ஒருநாள் மட்டும் அதாவது நேற்று மட்டும் திண்டுக்கல் - திருச்சி இடையே பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்.
இந்த ரயிலில் திருச்சி, மயிலாடுதுறை செல்லும் பயணிகள் அனைவருக்கும் பயணக்கட்டணம் திருப்பி வழங்கப்படும். எனவே அடுத்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் செல்லுமாறு அறிவுறுத்தினார். திண்டுக்கல்லில் இருந்து ரயில் ரத்து செய்யப்படும் என்பதை திருநெல்வேலி, மதுரை ரயில் நிலையங்களுக்கு தெரிவித்தும் முறையாக பயணிகளுக்கு தெரிவிக்காமல் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த குருவாயூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக 3 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் புறப்பட்டு சென்றது. தென்னக ரயில்வேயில் தற்போது அதிகளவில் ரயில்கள் ரத்து செய்யப்படுதலும், முறையான பராமரிப்பின்மையும், பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத போக்கும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications