அரசியல் மோகத்தால் நகை திருட்டில் ஈடுபட்ட தேமுதிக கவுன்சிலரின் கணவர் கைது
புதுச்சேரி: அரசியல் மோகத்தால் புதுச்சேரியில் பல்வேறு வீடுகளில் நகை திருடிய கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல். கடந்த ஜனவரி மாதம் இவரது வீட்டிற்கு வந்த இரண்டு பேர், தாங்கள் ஆதார் அட்டை சரி பார்க்க வந்திருப்பதாகக் கூறி அவரிடம் பேச்சு கொடுத்தனர். ஒருவர் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்னொருவர் வீட்டின் பின்புறம் சென்றார். பிறகு சிறிது நேரத்தில் அங்கிருந்து இருவரும் வெளியேறினர். அப்போது வீட்டுக்குள் வந்த செந்தில்வேல் பிரோ திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார், அப்போது, பீரோவில் இருந்த 38 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்வேல் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
வேலூரை சேர்ந்த விஜய், கணேஷ் ஆகிய இருவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 8 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கணேஷ் தலைமறைவானார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த கணேஷை பெரியகடை போலீசாரால் கைது செய்தனர். அவரிடமிருந்த 40 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். கைதுசெய்யப்பட்ட கணேஷின் மனைவி சுவிதா அந்த பகுதியின் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் (தே.மு.தி.க.) ஆவார்.
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் கணேஷ் கூறியதாவது:
எனக்கு சிறு வயதிலிருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காக அதிகமாக பணம் தேவைப்பட்டது. என்னிடம் போதுமான வசதிகள் இல்லாததால் நண்பர்களுடன் சேர்ந்து திருட ஆரம்பித்தேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நானும், எனது நண்பர் விஜயும் இணைந்து ஒவ்வொரு பகுதியாக கண் காணிப்போம். பின்னர் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியிலும், முதியவர்கள் இருக்கும் வீட்டிற்கும் சென்று தங்களை அதிகாரிகளை போல காட்டிக்கொண்டு திருடி வந்தோம். புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் 70 பவுனுக்கு மேலாக நகைகளை திருடி உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications