திடீர் திருப்பம்.. பாஜக பக்கம் சாய்கிறது தேமுதிக? - நவக்கிரக கூட்டணி தயார்!
சென்னை: ஒரே நேரத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக என பல கட்சிகளால் முற்றுகையிடப்பட்ட தேமுதிக தற்போது பாஜக பக்கம் போக முடிவெடுத்துள்ளதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.
கடைசி வரை திமுகவுக்கு அது பிடி கொடுக்கவே இல்லை. இதனால் வெறுத்துப் போன திமுக தனது முயற்சியை விட்டு விட்டது.
அதேசமயம் பாஜகவும், காங்கிரஸும் தொடர்ந்து முயற்சித்து வந்தன, பொறுமை காத்து வந்தன.
விஜயகாந்த்தோ காங்கிரஸ் பக்கம் சாய முயற்சித்தார். இதற்காக டெல்லிக்கெல்லாம் படையெடுத்தார். ஆனால் அவரால் பிரதமரை மட்டுமே சந்தித்துப் பேச முடிந்தது. சோனியா, ராகுல் அவருக்குப் பிடி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்செட்டாகி இன்று அவர் சென்னை திரும்பி விட்டார்.
இந்த நிலையில், பாஜக கூட்டணிக்கு அவர் தீர்மானித்து விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

9 கட்சிகள் அடங்கிய கூட்டணி
புதிய தகவலின்படி பாஜக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 9 கட்சிகள் தமிழக லோக்சபா தேர்தல் களத்தில் கை கோர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் மதிமுக
பாஜக அணிக்கு முதலில் வந்த கட்சி மதிமுக. அக்கட்சியைத் தொடர்ந்து புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, காந்திய மக்கள் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஆகியவையும் இணைந்தன.

பாமக
இதேபோல வட மாவட்டங்களில் ஓரளவு வாக்கு வங்கியுடன் இருக்கும் பாமகவும், பாஜக கூட்டணிக்கு வந்தது. அக்கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இருப்பதாக கூறப்பட்டாலும் கூட கூட்டணியில் அதுவும் இடம் பெறும் என்பது உறுதியாகியுள்ளதாம்.

லேட்டாக வந்த தேமுதிக
இந்த கட்சிகள் வரிசையில் தற்போது தேமுதிக லேட்டஸ்டாக வந்து சேர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாம்.

காங்கிரஸுக்காக காத்திருந்து வெறுப்பு
காங்கிரஸுக்கு காவடி எடுத்து அது சரிப்பட்டு வராததால் கோபமடைந்து விட்ட விஜயகாந்த், பாஜக பக்கம் பாய தீர்மானித்து விட்டதாக தெரிகிறது.

நவக்கிரக கூட்டணி
இதையடுத்து பாஜக தலைமையில் மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட 9 கட்சிகள் அடங்கிய நவக்கிரக கூட்டணி தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

புதன்கிழமை அறிவிப்பு
இந்தக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் கூட முடிந்து விட்டதாம். புதன்கிழமை சதுர்த்தி தினம். அன்றைய தினம் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாட்டுத் தரகர் என்று கூறினாரே தமிழருவி மணியன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், மாட்டுத் தரகர் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். எனவே அவர் எப்படி விஜயகாந்த்துடன் ஒரே மேடையில் தோன்றுவார் என்பது கேள்விக்குரியதாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications