அம்மா ஆட்சி எப்ப முடியும்னு கேட்டா 'மே'ன்னு சொல்லும்... பிரேமலதா ரகளை பேச்சு!
மதுரை: எங்க அம்மா கொடுத்த மாடு எப்பவுமே அம்மான்னுதான் சொல்லும் என்று அதிமுகவினர் மேடை தோறும் பேசி வர, தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதாவோ, அம்மா கொடுத்த ஆடு கிட்ட போயி உங்க அம்மா ஆட்சி எப்போ முடியும்னு கேளுங்க 'மே'ன்னு கத்தும் என்று ரகளையாக பேசி வருகிறார்.
நெல்லை தொடங்கி மதுரை, தஞ்சை, திருச்சி என செல்லும் இடங்களில் எல்லாம் தேர்தல் அறிக்கைகளை விளக்கி பேசி வருகிறார். பணம் கொடுத்தா வாங்கிக்கங்க என்று பேசியதால் இப்போது பிரேமலதா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 4 பிரிவுகளில் பிரேமலதா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேடைக்கு பிரேமலதா வருவதற்கு முன்பாகவே கூட்டத்தை சேர்க்க விஜயகாந்த் நடித்த படங்களில் இடங்களில் இருந்து பாடல்களைப் போட்டு ஆடல்... பாடல் என அமர்களப்படுத்துகின்றனர்.
'பொட்டு வைத்த தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்' என்ற பாட்டுக்கு விஜயகாந்த் போல வேடமணிந்த ஒருவர் வந்து ஆடிவிட்டு செல்கிறார். இந்த பாட்டைத் தொடர்ந்து பிரேமலதா மேடையேற ' வாழும் அன்னைத் தெரசா எங்கள் அண்ணியார்!' என்று முழக்கமிட்டு வரவேற்கின்றனர்.

பிரேமலதா உற்சாகம்
அதே உற்சாகத்தோடு மைக் பிடிக்கும் பிரேமலதாவோ, விட்டு விளாசுகிறார். தமிழகத்தில் இதுவரையில் ஆண்டு வந்த திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்திருப்பதுதான் மக்கள் நலக்கூட்டணி. இந்தக் கூட்டணியில் அப்பழுக்கற்றவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ஊழலை ஒழிப்போம்
ஊழலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு ஆட்சி நடத்திய திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வென்று கேப்டன் தலைமையில் ஆட்சி அமைக்கப்போகிறது மக்கள் நலக்கூட்டணி.

தேனில் விழுந்த ஞானப்பழம்
திமுகவுடன் ஒரு முறைகூட முறையான சந்திப்பு நடைபெறவில்லை. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி கூட அவராகவேதான் பழம் நழுவி பாலில் விழப்போகிறது எனக்கூறி வந்தார். நமது கேப்டன் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இது ஞானப்பழம். இந்தப்பழம் கனிந்து இப்போது தேனில் விழுந்திருக்கிறது என்று கூற அப்ளாஸ் அள்ளுகிறது.

தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்
தமிழகத்தில் காமராஜருக்கு அடுத்தபடியாக எம்ஜிஆர். இவர்கள் இருவருமே நல்லாட்சி நடத்தியவர்கள். அதன்பின்னர் வந்த திமுக மற்றும் அதிமுக இரண்டுமே ஊழலை மட்டுமே பிரதானமாக கொண்டு ஆட்சி நடத்தியவர்கள். இனி அதற்கு மாற்றாக கேப்டன் தமிழகத்தை ஆள்வதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் மக்கள் நலக்கூட்டணியை வெற்றிபெறச்செய்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்.

துரோகிகள் கதி
தேமுதிகவில் உள்ள மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருமே கேப்டன் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்திலிருந்து இருப்பவர்கள். எனவே அவர்கள் எதிர் காலத்தில் சட்டசபை உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, உள்ளாட்சி பிரநிதிகளாக உள்ளனர். இங்கிருந்து வேறு பக்கம் சென்ற 9 துரோகிகளின் கதி என்வாகப்போகிறது என பொறுத்திருந்து பாருங்கள்.காரணம் தமிழகத்தில் துரோகிகளுக்கு எப்போதும் இடமிருந்ததில்லை என்றும் கூறினார்.

மாடு புகுந்த மாநாடு
பிரேமலதா போகுமிடங்களில் எல்லாம் ஒரே மாதிரியாக பேசினாலும் சில நேரங்களில் டைமிங் ஆக பேசுகிறார். நெல்லையில் மக்கள் மத்தியில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்திற்குள் மாடு ஒன்று புகுந்து விட்டது. அப்போது அவர், ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதற்கு நன்றி சொல்ல வந்திருக்கும் என்று டைமிங் ஆக கூறினார்.

மே மாதம் ஆட்சி முடியும்
அம்மா கொடுத்த மாடு அம்மான்னு கத்துவதாக அதிமுகவினர் சொல்றாங்க. அதே அம்மா கொடுத்த ஆடு கிட்ட போயி உங்க அம்மா ஆட்சி எப்ப முடியும்னு கேளுங்க, அது 'மே'ன்னு கத்தும் என்று பேசி முடித்தார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications