துப்பாக்கி சூட்டைக் கண்டித்து சென்னையில் தேமுதிக போராட்டம்: கருப்பு சட்டையுடன் களமிறங்கிய விஜயகாந்த்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னையில் விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை : தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னையில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதில் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் தேமுதிக சார்பில் போராட்டம் நடந்தது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்தில் தேமுதிக தலைவர் கருப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
மேலும், இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான தேமுதிக தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திலும் தேமுதிக தொண்டர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
