For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரசேவைக்கு ஆள் அனுப்பிய பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது ஏன்?: கருணாநிதிக்கு ஜெ. கேள்வி

By Mathi
|

கடலூர்: அயோத்தி கரசேவைக்கு ஆள் அனுப்பிய பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்தது ஏன்? என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

லோக்சபா தேர்தலில் கடலூரில் அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் கரசேவைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்களை அனுப்பியது என்ற குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சுமத்துகிறார் கருணாநிதி. இதை நான் பல முறை மறுத்து இருக்கிறேன்.

இருப்பினும் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் மீண்டும் அதையே கூறி வருகிறார் கருணாநிதி.

DMK aligned with BJP that supported 'kar seva': Jayalalithaa

கருணாநிதியின் கூற்றில் எள்ளளவும் உண்மை இல்லை. கரசேவையை ஆதரித்தது பாரதிய ஜனதா கட்சி. கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது பாரதிய ஜனதா கட்சி. அந்தக் கட்சியுடன் தானே கருணாநிதி கூட்டு வைத்துக்கொண்டார்?

1999 முதல் 2003 முடிய பி.ஜே.பி. தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகித்து, வளமான இலாகாக்களை தி.மு.க. தானே பெற்றுக் கொண்டது? கருணாநிதி கரசேவைக்கு எதிரான கொள்கை உடையவர் என்றால் ஏன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார்? அந்தக் கூட்டணி ஆட்சியில் ஏன் பங்கேற்றார்? அந்த அமைச்சரவையில் தானே பல மாதங்கள் இலாகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் இருந்தார்?

எனவே இதைப் பற்றி பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது? பச்சை சந்தர்ப்பவாதியான கருணாநிதி தலைமையிலான தி.மு.க. வருகின்ற தேர்தலில் தலை தூக்காத அளவுக்கு நீங்கள் மரண அடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க_வின் சதித் திட்டங்களையும் மீறி, தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் விடை.

ஈழத் தமிழர் பிரச்சனை

இலங்கை தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது திமுக என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க_விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இவற்றின் மீது மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இல்லையே! இலங்கை அரசுக்கு சாதகமாகத் தானே இந்திய அரசு நடந்து கொண்டது? இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்த தி.மு.க. வற்புறுத்தியதா? இல்லையே! இப்படிப்பட்ட கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்ற உறுதியை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த காங்கிரஸ் கட்சியை மத்திய ஆட்சியிலிருந்து அகற்ற நீங்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)

கச்சத் தீவினை மீட்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. அதோடு நின்றுவிடவில்லை. கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. இப்படி தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

English summary
AIADMK general secretary and Tamil Nadu Chief Minister J Jayalalithaa Sunday said it was the BJP that supported 'kar seva' in Ayodhya of Uttar Pradesh. She said it was the DMK that aligned with the BJP and became part of the central government between 1999 and 2003.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X