தமிழகத்திற்கு அவசரமாக தற்காலிக முதல்வர் தேவை... ஸ்டாலின் அதிரடி கோரிக்கை
சென்னை : காவிரி நதிநீர் பிரச்சினையில் ஆளுங்கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்பதால் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டு பிரதமர், குடியரசுத்தலைவரை சந்திக்கப் போவதாக சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வரும் மத்திய அரசைக் கண்டித்து திமுக தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக திமுக தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று தஞ்சாவூர் தபால் நிலையம் அருகில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெற்றது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்த உண்ணாவிரதத்தில், முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். மேலும் முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், தேர்தல்பணிக்குழு தலைவர் எல்.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்.முத்துராமலிங்கம், உபயத் துல்லா, மதிவாணன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

தலைவர்கள் வாழ்த்து
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த உண்ணாவிரதத்துக்குப் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மு.க.ஸ்டாலினை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மு.க.ஸ்டாலினை போனில் தொடர்புகொண்டு போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்டாலின் பேச்சு
மாலை 5 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார். விவசாயிகள் உரிமையைப் பாதுகாக்க உடனே உண்ணாவிரதம் நடத்த உத்தரவிட்டவர் திமுக தலைவர் கருணாநிதி என்று அவர் கூறினார். மத்திய பாஜக அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

பிரதமரை ஏன் ஜெ. சந்திக்கவில்லை
காவிரி நதிநீர் பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று கூறிய ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக பிரதமரை ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டவேண்டும் என்றும் அதற்கு திமுக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் பலமுறை திமுக கூறியது. ஆனால் இதுவரை ஆளுங்கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
ஆளுங்கட்சி அனைத்துக்கட்சி கூட்டவில்லை என்றால் திமுக தலைவர் கருணாநிதி உத்தரவுடன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவோம் என்று கூறினார். ஒத்த கருத்துடைய விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லிக்கு சென்று பிரதமர், குடியரசுத் தலைவரை திமுக தலைமையில் சந்திப்போம் என்றும் ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து உண்ணாவிரதத்தை ஸ்டாலின் முடித்து வைத்தார்.

தற்காலிக முதல்வர்
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், முதல்வர் குணமடைந்து வரும் வரை தற்காலிக முதல்வர் நியமிக்கப்பட வேண்டும். இது அவசியமானது. முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அவர் குணமடையும் வரை தற்காலிக முதல்வர் அவசியம்.

காவிரி பிரச்சினை
காவிரி போன்ற முக்கியப் பிரச்சினைகள் தமிழகத்தில் உள்ளன. அவற்றில் முடிவெடுப்பதற்கு முதல்வர் அவசியம். எனவே முதல்வர் ஜெயலலிதா திரும்ப வரும் வரை தற்காலிக முதல்வர் இருக்க வேண்டியது அவசியமானது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications