Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்பு சட்டம் நிறைவேறினால் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு: இஃப்தார் விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களும் - கருணாநிதியும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வைத்து, இந்த விழாவிற்கான அழைப்பிதழை மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள்! இதைவிட மிகச்சிறப்பான - பொருத்தமான படம் நிச்சயமாக அமையாது. இந்தப் படம் அவருடைய நட்பின் அடையாளமாக விளங்கிக்கொண்டிருக்கிறது! காலம் காலமாக இன்ப துன்பங்களில் உறவாக - நட்பாக - உங்களுக்கான உரிமைகளுக்கான குரலாக திராவிட முன்னேற்றக் கழகம்தான் நிற்கிறது என்பதற்கான அடையாளம்தான், இந்தப் புகைப்படம்!

கருணாநிதியின் சிந்தனை மாற்றம்

கருணாநிதிக்கு சிந்தனை மாற்றத்தை உருவாக்கியதில் 'தாருல் இஸ்லாம்’இதழுக்கும்,
தாவூத் ஷாவுக்கும் பெரிய பங்கு இருக்கிறது! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பேரறிஞர் அண்ணாவையும் கருணாநிதியையும் இணைக்க பாலமாக இருந்ததே, இஸ்லாமிய சமுதாயம்தான்! திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவில்தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், கருணாநிதியும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டார்கள். கருணாநிதியைப் பொருத்தவரை பார்த்தீர்கள் என்றால், எத்தனையோ நண்பர்கள் இருப்பார்கள். அதில் குறிப்பாக, அசன் அப்துல்காதர், கருணை ஜமால். கவிஞர் கா.மு.ஷெரீப் என்று கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்த இஸ்லாமியர்கள் பல நண்பர்கள் உண்டு. இது எல்லாவற்றிற்கும் மேல், இன்றைக்கும் கருணாநிதியின் புகழைச் சொல்லும் “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!” பாட்டை பாடியவர் - நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் 'இசை முரசு’நாகூர் ஹனிபா அவர்கள்! 1967-இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த, அதற்கு தோள் கொடுத்து நின்றவர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள்.

காயிதே மில்லத்தும் கருணாநிதியும்

''முஸ்லீம் சமுதாயத்துக்கு நீங்கள் செய்த உதவிக்கெல்லாம் என்னுடைய நன்றி" என்று காயிதே மில்லத் அவர்கள் கடைசி நேரத்தில் அவர் மறைவதற்கு முன்பாக கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார். காயிதே மில்லத் அவர்கள் நன்றி சொன்னது, அதுவரை செய்த நன்மைகளுக்காக; அதைவிட அதிகமான நன்மைகளைத் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தபோதெல்லாம் கருணாநிதி செய்தார். கருணாநிதி செய்த சாதனைகளை பட்டியலிடவேண்டும் என்றால், நேரமில்லை. அதனால், சுருக்கமாக சொல்கிறேன்.

இஸ்லாமியர்களும் கருணாநிதியும்

முதல்முறை ஆட்சிக்கு வந்ததுமே மிலாதுநபிக்கு அரசு விடுமுறை விட்டார். அதை அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தாலும், மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, மீண்டும் பழையபடி மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தார். உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கினார்.

வக்பு வாரிய சொத்துக்களைப் பராமரிக்க முதன்முதலாக மானியம் வழங்கினார். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கினார். உருது அகாடமி தொடங்கினார்.

காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கி இடம் ஒதுக்கினார். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுத்தார்.காயிதே மில்லத் மகளிர் கல்லூரியை உருவாக்கினார்.

காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரிக்கு இடம் வழங்கினார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தலைவர் கலைஞரைப் பொறுத்தவரைக்கும் - 'இஸ்லாமியர்கள் வேறு; தான் வேறு’என்று எப்போதும் நினைத்ததில்லை. 'எனக்கு நன்றி சொல்லி உங்களிடமிருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’என்றுதான் அவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவரின் வழித்தடத்தில்தான், நம்முடைய இன்றைய திராவிட மாடல் ஆட்சியும் செயல்பட்டு வருகிறது.

சிறுபான்மையினர்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை கடந்த 4 ஆண்டு ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அண்மையில்கூட, தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

திராவிட மாடல் அரசும் இஸ்லாமியர்களும்

இஸ்லாமிய மக்களுக்கான நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்பான சில சாதனைகளைப் பட்டியலிடவேண்டும் என்றால், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 80 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

ஹஜ் பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஹஜ் மானியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து 11 ஆயிரத்து 364 ஹஜ் பயனாளிகள் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்காக 24 கோடியே 56 இலட்சம் ரூபாயை மானியமாக அரசு வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 31 ஆயிரத்து 625 பயனாளிகளுக்கு 207 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மையின மக்கள் பயன் பெற, பல்வேறு நலத் திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 405 கோடி ரூபாய் அளவில் அரசு நிதி தரப்பட்டிருக்கிறது. சிறுபான்மையின கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க 76 ஆயிரத்து 663 மாணவியருக்கு 4 கோடியே 82 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு, சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டது. எனவே, மாநில அரசு, இந்த ஆண்டு, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கியிருக்கிறது. வக்பு வாரியம் மூலம் வழங்க 12 கோடியே 17 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ் ஒரு இலட்சத்து ஆயிரத்து 159 மாணவிகள் பயன் பெறுவார்கள்.

தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்களை புனரமைக்கும் பணிகளுக்கு இதுவரை பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 தர்காக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளி வாசல்கள், தர்காக்கள், வக்பு நிறுவனங்களை, புனரமைக்கும் பணிகளுக்கு இதுவரை 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 308 வக்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு அரசின் நிதி உதவியாக 15 கோடியே 47 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

உலமாக்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் நலவாரியம் மூலமாக, 5,818 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு ஆண்டுதோறும் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிர்வாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர் காவல் அரணாக திமுக

இப்படி இசுலாமிய பெருமக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல் சூழலை மேம்படுத்தும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் இசுலாமியர்களைக் காக்கும் காவல் அரணாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும், நம்முடைய தமிழ்நாட்டில் மத ரீதியான வன்முறைகள் ஏற்படாமல், காத்து வரும் அரசாக நம்முடைய தி.மு.க அரசு எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

சிஏஏ எதிர்ப்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலமாக அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அதற்கு எதிரான மக்கள் இயக்கத்தை நடத்தி, ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், இந்த குடியுரிமை திருச்சத் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த கட்சிதான் அ.தி.மு.க.! குடியுரிமைத் திருத்த சட்டத்தை மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. ஆனால், தி.மு.க.வும் - கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தோம். மக்கள் மன்றத்திலும் போராடினோம்.

சிஏஏவும் அதிமுகவும்

ஆனால், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பழனிசாமி என்ன கேட்டார்? ”குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு முஸ்லீம் கூட பாதிக்கப்பட மாட்டார், யாருக்கு குடியுரிமை பறிபோனது? என்று கேட்டார். இதை சிறுபான்மையின மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இப்போது அவர், எந்தக் கூச்சமும் இல்லாமல் இசுலாமியர் விழாவில் கலந்துக்கொள்கிறார். ஆபத்து வரும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு அந்த குற்றவுணர்ச்சியே இல்லாமல் இப்படி சிலர் இப்தார் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

பொது சிவில் சட்டமும் திமுகவும்

பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவும், இது தனிமனித உரிமையை பறிப்பது என்று மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியது தி.மு.க.தான்! இப்போது கூட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இந்திய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிறுபான்மையின மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க. இதை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அதையும் நாடாளுமன்றத்தில் மிக கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது தி.மு.க.-வும் அதன் கூட்டணிக்கட்சிகளும். ஒருவேளை அது சட்டமானால், அதை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். பா.ஜ.க. அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற தி.மு.க. ஒருபோதும் இஅனுமதிக்காது. உறுதியாக போராடுவோம்! உங்களுக்குத் துணையாக எப்போதும் இருப்போம்!

இஸ்லாமியர் உரிமையை திமுக பாதுகாக்கும்

இப்படி இஸ்லாமியர் உரிமையை காப்பாற்றுகின்றவர்களாக செயல்படுபவர்கள் நாங்கள். இஸ்லாமியர் உரிமைக்கு போராடுகின்றவர்கள், வாதாடுகின்றவர்கள்தான் இப்படியான விழாக்களில் கலந்துக்கொள்ள தகுதி படைத்தவர்கள். அந்த தகுதியோடு உள்ளார்ந்த அன்போடு சகோதர உணர்வோடு நாங்கள் இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம், பங்கெடுக்கிறோம். சிறுபான்மை மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களை அரசின் மூலமாக தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அதே நேரத்தில், இசுலாமியரின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி அவர்களுக்கு காவல் அரணாக விளங்கும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எந்நாளும் இருக்கும்! இசுலாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது புனித ரமலான் வாழ்த்துகளை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+