திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை: டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு வரும் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பிப்ரவரி 13 ஆம் தேதி நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கூட்டணி உருவானதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கடந்த 25-ம் தேதி சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் தரப்பில் 2011 சட்டசபை தேர்தலில் ஒதுக்கிய 63 தொகுதிகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் 25 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. இதனால் தொகுதி பங்கீட்டில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இதனிடையே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கு இதுவரை 13 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தலா 1 தொகுதி வீதம் காங்கிரஸ் கட்சிக்கு 32 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இல்லை என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகத்தான் நடக்கும். அதை இழுபறி என்று சொல்லமுடியாது. அது நடைமுறையில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஒரு சிக்கல்.
ஒவ்வொரு முறையும் மத்திய தலைமையோடு கலந்து ஆலோசித்துவிட்டு வர வேண்டிய கட்டாயம் பேச்சுவார்த்தை நடத்த வருபவர்களுக்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பொதுவாக எல்லா தேர்தல்களிலும் இப்படித்தான் நடக்கிறது. இதை இழுபறி என்று சொல்லமுடியாது. காங்கிரசின் பாணி என்று வேண்டுமானால் சொல்லலாம். இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications