தூத்துக்குடியில் பரபரப்பு.. மேயர் முன் திமுக கவுன்சிலரை சரமாரியாகத் தாக்கிய அதிமுக மாஜி கவுன்சிலர்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மேயரின் முன்னிலையில் முன்னாள் அதிமுக கவுன்சிலரும், இந்நாள் திமுக கவுன்சிலரும் மோதிக்கொண்டனர். இதில் திமுக கவுன்சிலரின் சட்டை கிழிந்து காயமடைந்தார். பின்னர் வேறு சட்டை கொண்டு வரப்பட்டு அதை அணிந்து கொண்டு மற்ற திமுக கவுன்சிலர்களுடன் அவர் வெளிநடப்புச் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்வர்ன ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தினை செயல்படுத்துவது தொடர்பான கவுன்சிலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா தலைமை வகித்தார். கமிஷனர் மதுமதி, துணை மேயர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியவுடன் திமுக கொறடா கோட்டுராஜா இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் திமுக கவுன்சிலர்களுக்கு தரப்படவில்லை. மாறாக எங்களது வார்டு உட்பட அனைத்து வார்டுகளிலும் விண்ணப்பம் ஒன்று ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வேண்டும் என்றே புறக்கணிக்கப்படுகின்றனர். இப்படி மாநகராட்சியின் ஒவ்வொரு திட்ட செயல்பாடுகளிலும் திமுகவினர் புறக்கணிக்கப்பட்டு வருவது சரியானது அல்ல என்று மேயரிடம் புகார் கூறினார். இதற்கு மேயர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் மறுப்பு தெரிவிக்க கூட்டத்தில் சிறிதுநேரம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் கூட்டம் துவங்கி நடந்த வேளையில், இத்திட்டத்தினை வார்டுகளில் சென்று திட்டத்தினை செயல்படுத்துவதுடன், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுபைதாபேகம் என்பவர் வார்டு வாரியாக சென்று வந்த விபரம் குறித்து எடுத்துக்கூறினார்.
அப்போது திட்ட ஒருங்கிணைப்பாளர், நான் 11வது வார்டில் கவுன்சிலர் செண்பகசெல்வனை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளேன் என்றார். இதனைக் கேட்ட 45வது வார்டு திமுக கவுன்சிலர் ஆனந்தராஜ், செண்பகசெல்வன் கவுன்சிலரா? இல்லை அவரது மனைவி பத்மாவதி கவுன்சிலரா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்தநேரத்தில் கூட்டத்தில் பார்வையாளராக அமர்ந்திருந்த முன்னாள் அதிமுக கவுன்சிலரான செண்பகச்செல்வன் ஓடிவந்து திமுக கவுன்சிலர் ஆனந்தராஜை தட்டிக் கேட்க இருவருக்கும் இடையே தகாத வார்த்தைகளுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. முன்னாள் அதிமுக கவுன்சிலரான செண்பகச்செல்வன், திமுக கவுன்சிலர் ஆனந்தராஜ் இருவரும் மேயர் சசிகலாபுஷ்பா முன்னிலையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் திமுக கவுன்சிலர் ஆனந்தராஜின் சட்டை கிழிந்தது. இதனையடுத்து மற்ற கவுன்சிலர்கள் ஓடிவந்து சண்டையை சரி செய்தனர். திமுக கவுன்சிலர்கள் முன்னாள் அதிமுக கவுன்சிலர் செண்பகச்செல்வன் கூட்டத்திற்கு எப்படி வரலாம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைக்கேட்ட மேயர் இந்த கூட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான். பத்திரிக்கையாளர்கள் எல்லாம் கூட்டத்திற்கு வந்துள்ளனர், மாநகராட்சியிலுள்ள பொதுமக்களுக்கான திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான இந்த கூட்டத்தில் செண்பகச்செல்வன் பொதுமக்கள் என்ற ரீதியில் வந்துள்ளார். இதில் தவறேதும் இல்லை என்றார்.
இதனைக்கேட்ட திமுக கவுன்சிலர்கள் அப்படியானால் கூட்டத்தை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடத்தியதற்கு பதிலாக, வெளியே வைத்து நடத்தி இருக்க வேண்டியதுதானே என்று கூறி கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதன்பின்பு புதிய சட்டை கொண்டுவரப்பட அதை அணிந்த திமுக கவுன்சிலர் ஆனந்தராஜ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். தாக்குதலில் காயம் அடைந்த திமுக கவுன்சிலர் ஆனந்தராஜ் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தமோதல் குறித்து அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் பாதுகாப்பிற்காக மாநகராட்சி வளாகத்தில் குவிந்தனர். திமுக கவுன்சிலரை முன்னாள் அதிமுக கவுன்சிலர் மேயர் முன்பே தாக்கி சட்டையை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications