For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் மாணவிகள் மரணம்... அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: விழுப்புரம் மாணவிகள் 3 பேர் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாஜ ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:

'விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகிய மூவரும் 23.1.2016 அன்று கைகள் கட்டப்பட்டும், உடம்பில் காயங்களோடும் கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்துள்ளனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற இந்த கல்லூரியில் முறையான வகுப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், கழிவறைகள் உள்ளிட்டு எவ்வித வசதியும், பாதுகாப்பும் இல்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் பல மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.

DMK, CPM, VCK seek probe into student deaths

கல்லூரிக்கு வந்த சில நாட்களிலேயே பல மாணவர்கள் போதிய வசதிகள் இல்லை என வெளியேற முயற்சித்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகம் அடியாட்களை வைத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டியும், தாக்கியும் விரட்டியடித்துள்ளது. இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல முறை மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகள், அமைச்சர் தொடங்கி முதலமைச்சர் வரை பலமுறை மனு கொடுத்துள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் முறையிட்டு தங்களின் வலுவான எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதன் பிறகே வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடந்துள்ளது. விசாரணை அறிக்கையின் மீது கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு சம்பந்தப்பட்ட மாணவர்களை மிரட்டி அச்சுறுத்தியுள்ளது, கொடுமைப் படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் மூன்று மாணவிகள் தலை மற்றும் உடம்பில் காயங்களுடன் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கல்வியை குறிப்பாக உயர் கல்வியை - மருத்துவக் கல்வியை தனியார்மயமாக்கி கட்டணக் கொள்ளைக்கும், தனியார் லாப வெறிக்கும் உடந்தையாக இருக்கும் தமிழக அரசின் கல்விக் கொள்கையே இந்த மூன்று மாணவிகளின் மரணத்திற்கும், பல மாணவிகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் பாழானதற்கும், பலரது பொருளாதார இழப்பிற்கும் காரணமாக இருந்துள்ளது.

தமிழக அரசின் இந்த உயர்கல்வி தனியார்மயக் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு மூன்று மாணவிகளின் மரணம் குறித்து உடனடியாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எவ்வித வசதியும் அ ற்ற ஒரு கட்டிடத்தை மட்டும் வைத்துக் கொண்டு மருத்துவக் கல்லூரி நடத்த அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு, அங்கு பயிலும் மாணவர்கள் கட்டமைப்பு வசதிகள் உள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற இதர கல்லூரிகளில் பயில்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கல்லூரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்குவதோடு, இதுகாறும் மாணவர் குடும்பத்திலிருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் அதிகமாக பெறப்பட்ட பணத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி தருவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

மூன்று மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர்கள் என்பதால் அவர்களின் இந்த மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். பலமுறை புகார் அளித்து முறையிட்ட பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும். முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத அமைச்சரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.

இதே போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் சுயநிதி பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போதுமான வசதிகளும், உரிய கட்டணங்களும் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கு தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

விசாரணைக்கு உத்தரவிடுக- மு.க.ஸ்டாலின்

இச்சம்பவம் தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தம்முடைய முகநூலில் பதிவு செய்துள்ளதாவது:

'விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த திருவாரூரைச் சேர்ந்த பிரியங்கா, திருவெற்றியூரைச் சேர்ந்த மோனிஷா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சரண்யா ஆகிய மூன்று மாணவிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தங்கள் மகள்களை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

DMK, CPM, VCK seek probe into student deaths

இயற்கை மருத்துவக் கல்லூரியில் உரிய வசதிகள் இல்லையென்றும், பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாகிறோம் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்த மனுக்கள் மீதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இறந்து போன மாணவிகளின் பெற்றோர் கூறுவது மேலும் கொடுமையாக இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டிருந்தால் இந்த மரணத்தை தடுத்திருக்கலாம்.

வாழ வேண்டிய வயதில், இந்த மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டிய வயதில் மருத்துவம் பயின்ற இந்த இளம் மாணவிகளை இப்படி துயரமான தற்கொலைக்கு தூண்டிய காரணங்கள் பற்றி அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாணவிகளை இழந்த பெற்றோருக்கு தலா 25 லட்சம் ரூபாய் அரசு நிதியுதவி செய்ய வேண்டும். மீதியிருக்கின்ற மாணவ மாணவிகளை உடனடியாக அவர்கள் விரும்பும் வேறு கல்லூரிக்கு மாற்றி உத்தரவிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீதி விசாரணை தேவை- திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவிகள் மூவர் சாவு குறித்து நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான "இயற்கை மருத்துவக் கல்லூரியில்" பயின்ற பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய மாணவிகள் மூவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

"கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை; முறையாகப் பாடங்கள் நடத்துவதில்லை; அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்; விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு நல்ல குடிநீர், நல்ல உணவு போன்றவை கிடைப்பதில்லை" என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாகவே அக்கல்லூரி மாணவர்கள் போராடி வந்துள்ளனர் என்றும், ஆனால், அரசு தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை ஏதுமில்லையென்றும் தெரியவருகிறது.

கல்லூரி நிர்வாகத்தால் எழும் நெருக்கடிகள் ஒருபுறம், அரசின் மெத்தனத்தால் உருவான விரக்தி ஒருபுறம் என மாணவிகளுக்கு ஏற்பட்ட மனஅழுத்தமே இந்தக்கொடுமைக்குக் காரணம் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில், அம்மாணவிகளின் பெற்றோர் "இது தற்கொலை அல்ல; கொலை தான்" என்றும் "தமிழக அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.

எனவே, குற்றவாளிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உண்மையை வெளிக்கொண்டுவரும் வகையில் நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும், இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

English summary
The suicide of three Villupuram college students on Friday night has snowballed into a controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X