கலவரம் செய்ய வந்த வைகோவை தடுத்தது சரியே.. திமுக அரியலூர் மா.செ. சிவசங்கர் வரவேற்பு
காவிரி மருத்துவமனையில் வைகோ கலவரம் செய்யதான் வந்தார் என்று திமுவின் அரியலூர் மாவட்ட செயலர் சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார். வைகோவை திமுக தொண்டர்கள் தடுத்தது சரியானதே; வரவேற்கிறேன் என்றும் சிவசங்கர் கூ
சென்னை: காவேரி மருத்துவமனைக்கு கலவரம் செய்யும் நோக்கத்துடன்தான் வந்த மதிமுக பொதுச்செயலர் வைகோவை தடுத்ததை தாம் வரவேற்பதாக திமுகவின் அரியலூர் மாவட்ட செயலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ-வை தடுத்து அனுப்பியதை நான் வரவேற்கிறேன்.
மருத்துவமனையில் ஸ்டாலின் இல்லாத நேரத்தில், வைகோவுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு, ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து கொண்டுள்ளார்கள். "திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்ததாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கருணாநிதிக்கோ எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல. திமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை திமுக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன் கேட்டு கொள்கிறேன்",என்று ஸ்டாலின் அறிக்கை விட்டு கண்டித்துள்ளார்கள். அது அவரது தகுதி.

வரவேற்பு
வைகோ தகுதிக்கு, நடந்த இந்த சம்பவத்தை நான் வரவேற்கிறேன். மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடலுக்கு மரியாதை செலுத்தவே திமுகவினர் கோபால்சாமியை அனுமதிக்கவில்லை. இன்று தலைவரை பார்க்க வந்தால் திமுகவினர் அனுமதிக்கமாட்டார்கள், கொந்தளிப்பார்கள் என்பதை கோபால்சாமி அறிவார்.

கலவரம் செய்ய வந்தார்
இன்று காலையில் இருந்தே இந்த செய்தி முகநூலிலும் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இதை அவர் கட்சி முகநூல் தோழர்கள் மூலமாக அறிந்த கோபால்சாமி கலவரம் செய்யும் நோக்குடனே 'காவேரி' மருத்துவமனை வந்தார். வந்த நோக்கம் நிறைவேறியதாக இப்போது மகிழ்கிறார்.

எள்ளி நகையாடுகிறார்...
நடந்த சம்பவத்திற்காக ஸ்டாலின் திமுக தோழர்களை கண்டித்து அறிக்கை விட்டதை எள்ளி நகையாடி கோபால்சாமி அறிக்கை விடுத்துள்ளார். திமுகவை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஒரு கட்சி நடத்தும் நபர் கோபால்சாமி.

பழிசுமத்தியவர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு அருகில் நின்று கொண்டு, திமுக மீது பொய் பழி சுமத்திய ஒரே நபர் இந்த மகான் மாத்திரமே. அதே போன்ற பழி சுமத்தும் எண்ணத்தோடு தான் இன்றும் வந்திருக்கிறார்.

மனக்குமுறல்
அதிமுக நிர்வாகிகள் இன்று கருணாநிதி உடல்நலம் விசாரிக்க வந்தபோது கூட எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் கோபால்சாமி வந்த போது, திமுக தோழர்கள் கோபமுற்று, கொந்தளித்தார்கள் என்றால் அது அவர்களின் மனக்குமுறல்.

நலம் விசாரிப்பதாக நாடகம்..
தொட்டிலையும் ஆட்டுவது , பிள்ளையையும் கிள்ளுவது யார் என தெரியும் என்று கோபால்சாமி கூறியிருக்கிறார். நஞ்சையும் கக்கிவிட்டு, நலம் விசாரிப்பதாக நாடகம் ஆட வந்தது நீ தான் என்பதை நாடறியும். நாவடக்கு. இது தான் உண்மை தொண்டர்களிடம் இருந்து வெளிபடும், துரோகிகளுக்கான எச்சரிக்கை. புரிந்து கொள்.
திருப்பி அனுப்பியது சரியே
இந்த நபர் பார்க்க வந்தார் என்று கேள்விபட்டிருந்தால், கருணாநிதி கூட மகிழ்ந்திருக்கலாம். அது அவர் பண்பாடு. இவர் போன்றோர் பண்பாட்டிற்கு திருப்பி அனுப்பியதே சரி. அதை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு சிவசங்கர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
