பிரதமர் வேட்பாளர்.. மோடி, ராகுலுக்கு ஆதரவு இல்லை- கருணாநிதி திட்டவட்டம்!!
சென்னை: லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பாஜகவின் நரேந்திர மோடி, காங்கிரஸின் ராகுல் காந்தி அல்லாத ஒருவரை முன்னிறுத்தியே பிரசாரம் மேற்கொள்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று கருணாநிதி வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய பின்னர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: இந்தத் தேர்தலில் எந்த ஒரு தேசியக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகிறீர்கள். இது உங்களுக்கு பின்னடைவு இல்லையா?
கருணாநிதி: எந்தப் பின்னடைவும் எங்களுக்கு ஏற்படாது.
கேள்வி: ஜெயலலிதா தன்னைப் பிரதமராக முயற்சி செய்வதால், தமிழ்நாட்டு மக்கள் அவருக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று சொல்கிறார்களே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: அவர்கள் முயற்சி செய்வதும் தெரியாது; தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பார்கள் என்பதும் தெரியாது!
கேள்வி: பா.ஜ.க. தலைவராக மோடியை முன்னிறுத்தி அவர் தான் பிரதமர் என்று கூறிப் பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தான் பிரதமர் என்று பிரச்சாரம் செய்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் பிரதமராக யாரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும்?
கருணாநிதி: இவர்கள் அல்லாத ஒருவரை!
திமுக அணியில் இடதுசாரிகள் இல்லையே..?
கேள்வி: உங்கள் கூட்டணிக்கு வர மாட்டோம் என்று இடதுசாரிகள் தெரிவித்திருக்கிறார்களே?
கருணாநிதி: அதைப் பற்றி எனக்குத் தெரியாது.
கேள்வி: பா.ஜ.க. சார்பாக புதிய கூட்டணி தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. அது திராவிடக் கட்சிகளுக்கு எந்த அளவிற்கு சாதக பாதகங்களை ஏற்படுத்தும்?
கருணாநிதி: ஏற்கனவே எப்படி அமைந்ததோ, அப்படித் தான் இப்போதும் அமையும்.
கேள்வி: தி.மு.க. வேட்பாளர் ஒருவரை எதிர்த்து தஞ்சையில், புதுக்கோட்டையில் கொடும்பாவி எரித்ததைப் பற்றி?
கருணாநிதி: அதைப் பற்றி எனக்குத் தெரியாது.
கேள்வி: தமிழகத்தில் இந்த முறை பல முனை போட்டி நடைபெறவிருக்கிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: மக்களுக்கு நல்லது தான்!
கேள்வி: காங்கிரஸ் கட்சி உங்கள் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்களே?
30% வாய்ப்பு கொடுக்கப்பட்டதா?
கருணாநிதி: இவைகள் எல்லாம் உங்களுடைய யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி. ஆனால் நீங்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை இந்த அளவுக்கு குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
கேள்வி: உங்கள் தேர்தல் அறிக்கையில் 100 தலைப்புகளில் மிக விரிவாக அனைத்துத் தரப்பினரின் பிரச்சினையையும் உள்ளடக்கி வெளியிட்டிருக்கிறீர்களே?
கருணாநிதி: நன்றி.
கேள்வி: இளைஞர்களுக்கு 30 சதவிகிதம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று முன்பு சொல்லியிருந்தீர்கள். ஆனால் 30 சதவிகிதம் தரப்படவில்லை என்று சொல்கிறார்களே?
கருணாநிதி: இப்போது 30 சதவிகிதத்திற்கு மேலாகவே இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப் பட்டுள்ளது.
கேள்வி: உங்கள் கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
கருணாநிதி: எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வேறு யாரையும் எதிர்பார்க்கவில்லை. எனவே எந்தக் கட்சியினர் வருவார்கள் என்று காத்திருக்கவில்லை.
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications