பட்ஜெட்டுக்காக பட்டை நாமம் – திமுக பெண் கவுன்சிலரைத் துவைத்தெடுத்த அதிமுக பெண் கவுன்சிலர்
கோவை: கோவையில் பட்டை, நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மன்ற கூட்டத்திற்கு பட்டை, நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர்கள் மீது தண்ணீரை ஊற்றி பட்டை, நாமத்தை அழிக்க முற்பட்டனர்.
இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். அன்னம்மாள் என்ற பெண் கவுன்சிலர் மீனா லோகுவை சரமாரியாக தாக்கினார். இதில் மீனா லோகுவுக்கு காயம் ஏற்பட்டது.
அதிமுக கவுன்சிலர்களின் தாக்குதலை கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீனா லோகு, "கூட்டம் ஆரம்பித்தவுடன் அதிமுக கவுன்சிலர்கள், ஊழல் குற்றவாளி கருணாநிதி என்று முழக்கம் எழுப்பினர். உடனே நாங்கள், ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா என்று சொன்னோம். அதை நான் ஒரு பேப்பரில் எழுதினேன்.
உடனே அதிமுக கவுன்சிலர் அன்னம்மாள் அந்த பேப்பரை கிழித்து எறிந்து, ஒரு கூர்மையான ஆயுதத்துடன் என்னை தாக்க வந்தார். என் கையில் தாக்கியதில் காயம் ஏற்பட்டது. பெயர் பலகையை எடுத்து என்னை தாக்கினார்" என்று தெரிவித்தார்.
அப்போது மீனா லோகு மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications