ஆர்.கே.நகரில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு... மீண்டும் உதயமாகிறது பிரமாண்ட கூட்டணி?
ஆர்.கே.நகரில் திமுகவுக்கு மதிமுகவும் ஆதரவு தந்துள்ளதன் மூலம் தமிழகத்தில் ஒரு பிரமாண்ட கூட்டணி உதயமாகிறது.
சென்னை: ஆர்.கே.நகரில் திமுகவுக்கு மதிமுகவும் ஆதரவளித்துள்ளதன் மூலம் உள்ளாட்சித் தேர்தல், 2019 லோக்சபா தேர்தல்களுக்கு திமுக தலைமையில் தமிழகத்தில் மெகா கூட்டணி உதயமாகக் கூடும் என தெரிகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன. இங்கு சுயேட்சை வேட்பாளர்களாக தினகரன், தீபா மற்றும் நடிகர் விஷால் போட்டியிடுகின்றனர்.

அடுத்தடுத்து ஆதரவு
தேமுதிக, பாமக, தமாகா ஆகியவை இத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவும் தரவில்லை. திமுக வேட்பாளர் மருது கணேஷூக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தன. இந்த வழக்கமான கூட்டணி கட்சிகள் அல்லாமல் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மதிமுக நிலை அறிவிப்பு
இந்த நிலையில் சென்னையில் இன்று கூடிய மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஆர்கே நகர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தபட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்தார்.

வைகோ விளக்கம்
அத்துடன் எதிர்காலத்தில் திமுகவுடனான கூட்டணி தொடருமான என்ற கேள்விக்கு, இது ஒரு தொடக்கப் புள்ளி எனவும் வைகோ கோட்டிட்டுக் காட்டியிருக்கிறார். ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் திமுக- மதிமுக கூட்டணி தொடரும் என்றே தெரிகிறது.

உருவாகிறது பிரமாண்ட கூட்டணி
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக திமுக ஏற்கனவே தேசிய அளவில் பிரமாண்ட கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. தமிழகத்திலும் பாஜக மற்றும் அதன் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவுக்கு எதிராக திமுக தலைமையில் மிகவும் வலுவான கூட்டணி உதயமாகிறது என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் சுட்டுக்காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications