பிரதமர் மோடி சந்திப்பின் மர்மம் தான் என்ன?... சந்தேகங்களை களைவாரா ஜெயலலிதா?.. கருணாநிதி கேள்வி
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி - தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து எழும் சந்தேகங்களைக் களைவது ஜனநாயகக் கடமை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கே சென்று விருந்தில் கலந்து கொண்டது முறைதானா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியுள்ளதாவது...

7-8-2015 அன்று சென்னைக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்ததோடு, அவரது வீட்டிலேயே மதிய விருந்திலும் கலந்து கொண்டார் என்று ஏடுகளில் செய்தி வந்தது.
அதைத் தொடர்ந்து, பல்வேறு நாளேடுகள் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே 2016 தமிழகச் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கான கூட்டணி ஏற்பட்டுவிட்டது என்றும், பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்றுகூடப் பேசி முடிவெடுக்கப்பட்டது என்றும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்தச் சந்திப்பு பற்றி பிரதமர் தரப்பிலோ, முதல்வர் தரப்பிலோ எந்த விளக்கமும் இதுவரை கூறப்படவில்லை. ஆனால் அரசியல் நோக்கர்கள் இயல்பாகச் சில சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தண்டிக்கப்பட்டு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்தைக் காரணங்களின் அடிப்படையில் விடுதலை பெற்று, தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கே சென்று விருந்தில் கலந்து கொண்டது முறைதானா என்று ஒரு சிலர் சந்தேகப்படக் கூடும்.
உடல் நலம் சரியில்லாத ஜெயலலிதாவை மோடி சந்தித்தது அரசியல் நாகரிகம் என்று பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் கூறிய போதிலும், உடல் நலம் இல்லாத போது விருந்து கொடுக்கவும், விருந்து அருந்தவும் என்பது பொருத்தமாக இருக்கிறதா? உடல் நலம் சரியில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் கூறுகிறார். ஆனால் அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதமரோ, ஜெயலலிதா வீட்டிற்கே சென்று விருந்து அருந்துகிறார். இதில் உள்ள முரண்பாட்டின் அடிப்படையில் சிலர் சந்தேகிக்கக் கூடும்.
பிரதமர் மோடியே, வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா வீட்டிற்கே சென்று மதிய விருந்தில் கலந்து கொண்டுவிட்டு வரும்போது, ஜெயலலிதாவின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்ன அணுகுமுறையினை மேற்கொள்வார்களோ என்று ஒரு சிலர் சந்தேகம் கொள்ளக் கூடும்.
நியாயத்தின் அடிப்படையிலே நீதிபதிகள் சுதந்திரமாகத் தீர்ப்பு கூறினால் கூட, அந்தத் தீர்ப்பு பிரதமரும், முதலமைச்சரும் சந்தித்த காரணத்தால்தான் தீர்ப்பு அவ்வாறு கூறப்பட்டது என்றும் சிலர் சந்தேகிக்கக் கூடுமல்லவா?
சென்னையில் நடந்த தேசிய கைத்தறி தின விழாவில் பிரதமர் மற்றும் ஆளுநர் பங்கேற்ற போது, விமான நிலையம் வரை சென்று அரை மணி நேரம் காத்திருந்து பிரதமரை வரவேற்ற தமிழக முதலமைச்சர் மட்டும் ஏன் அதிலே கலந்து கொள்ளவில்லை? நெசவாளர்கள் என்றால் முதல் அமைச்சருக்குப் பிடிக்காதா? பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வந்து அரசு நிகழ்ச்சி ஒன்றிலே பங்கேற்கும்போது, அந்த மாநில முதலமைச்சரும் கலந்து கொள்வதுதானே மரபு. ஆனால் தமிழக முதலமைச்சர் பங்கேற்காமல் தவிர்த்தது சரிதானா என்று சிலர் சந்தேகப்படக் கூடும்.
அதிலும்கூட, பிரதமர் போன்ற மிக முக்கிய விருந்தினர்கள் (வி.ஐ.பி.க்கள்) கலந்து கொள்கிற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர்களின் வாழ்த்துச் செய்திகளையோ, உரையையோ படிப்பது வழக்கம் இல்லை. ஆனால் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், அழைப்பிதழிலேயே இடம் பெறாத மாநில முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சு படிக்கப்பட்டது மரபுதானா என்று சிலர் சந்தேகம் எழுப்பக் கூடும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கான கோரிக்கை மனுவை தலைமைச் செயலகத்திலோ அல்லது விமான நிலையத்திற்கே சென்று முதலமைச்சர் வரவேற்றபோது பொது இடத்திலோ வழங்காமல், பிரதமரை தன்னுடைய வீட்டிற்கே வரவழைத்துக் கொடுப்பது சரியான மரபுதானா என்று சிலர் சந்தேகப்படக் கூடும்.
பிரதமரை விமான நிலையம் வரை சென்று வரவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, மரபுப்படி அவரை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்திருக்க வேண்டுமல்லவா? அதுதானே பண்பாடு! ஏன் அந்தப் பண்பாட்டு மரபைக் காப்பாற்ற வரவில்லை என்ற சந்தேகமும் சிலருக்கு வரக்கூடும்.
சிறந்த காந்தியவாதியான சசிபெருமாள் மதுவிலக்குப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியவர் மறைந்து ஒரு வாரம் கழித்து அடக்கம் செய்யப்படுகிற துயரமான நேரத்தில், மதுவிலக்குக் கொள்கையிலே நாட்டம் உள்ளவர்கள் எல்லாம் அந்தச் சாவுக்காகப் பெரிதும் வருந்தி அஞ்சலி செலுத்துகின்ற அதேநேரத்தில், ஏன் மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழகம் முழுவதும் உள்ள கட்சிகள் எல்லாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற கொந்தளிப்பான நேரத்தில், முதலமைச்சர் பிரதமரை அழைத்து விருந்தளிப்பது நாகரிகம்தானா? முக்கியமான ஒருவருடைய பிரிவை அலட்சியப்படுத்துவதாகாதா? என்ற சந்தேகம் சிலருக்கு வரக் கூடும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு, பல நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறாரே, எந்த மாநிலத்திலாவது, ஏன் அவருடைய கட்சி ஆளுகின்ற மாநிலங்களிலேகூட, பிரதமர் முதல் அமைச்சரின் இல்லத்திற்கே சென்று விருந்திலே கலந்து கொள்ளவில்லையே, தமிழகத்திலே மட்டும் மரபை மீறியது முறைதானா என்ற சந்தேகமும் சிலருக்கு ஏற்படக் கூடும்!
இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைந்த போது முதலமைச்சரால் போக முடியவில்லை; இஸ்லாமிய பெருமக்களுக்காக அவர் அழைப்பு விடுத்து நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு முதலமைச்சரால் போக முடியவில்லை; ஏன், தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை நிறைவேறி நான்கைந்து மாதங்கள் கடந்து விட்டன; ஆனால் சட்டமன்றத்தைக் கூட்டி மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த ஆட்சியினரால் முடியவில்லை; மதுவிலக்குக் கோரிக்கை மாநிலம் முழுவதும் எழுப்பப்பட்டு, தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அதுபற்றி விவாதிக்கச் சட்டப்பேரவையைக் கூட்ட முன் வரவில்லை; இந்த நிலையில் பிரதமருக்கு விருந்து அளிக்க மட்டும் எப்படி முடிகிறது என்று ஒரு சிலர் சந்தேகம் கேட்கக் கூடும்.
மிகப் பரவலாகப் பத்திரிகையாளர்களாலும், நடுநிலையாளர்களாலும், அரசியல் விமர்சகர்களாலும் எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு வரும் இந்தச் சந்தேகங்களையெல்லாம் பிரதமர் அலுவலகமோ, முதலமைச்சர் அலுவலகமோ உரிய விளக்கத்தின் மூலம் போக்க வேண்டும் அல்லவா? போக்குவார்களா? சந்தேகங்களைக் களைவது ஜனநாயகக் கடமை அல்லவா?'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications