ஸ்டாலின் காரில் போலீஸ் சோதனை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொதிப்பு.. சசிகலாவைக் கண்டித்து ஊர்வலம்
சென்னை: தமிழக சட்டசபைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ஸ்டாலின் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குற்றவாளி சசிகலாவின் ஆதிக்கத்தைக் கண்டிப்பதாக கூறி அவரும், திமுக எம்எல்ஏக்களும் முழக்கமிட்டபடி ஊர்வலமாக சாலையில் நடந்து வந்து சட்டசபைக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோருகிறது. இதற்காக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் சட்டசபைக்கு புறப்பட்டு வந்தார். நுழைவாயிலேயே ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களின் கார்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் ஸ்டாலினின் காரையும் போலீஸார் சோதனையிட்டனர். இதனால் கோபமடைந்த ஸ்டாலின் போலீஸாருடன் கடுமையாக வாதிட்டார். திமுக எம்.எல்.ஏக்களும் கீழே இறங்கி வாதிட்டனர். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சாலையிலேயே இறங்கி ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்டசபை வளாகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

குற்றவாளி சசிகலாவின் ஆதிக்கத்தைக் கண்டிப்பதாகவும், போலீஸ் அராஜகத்தைக் கண்டிப்பதாகவும் கூறி முழக்கமிட்டபடி நடந்து சென்று சட்டசபைக்குள் நுழைந்தனர் திமுக எம்.எல்.ஏக்கள். இதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. தற்போது திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் ஸ்டாலின் அறையில் உள்ளனர். சட்டசபை கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர்கள் உள்ளே செல்லவுள்ளனர்.












Click it and Unblock the Notifications